செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (18:50 IST)

நான் பா.ரஞ்சித், லோகேஷ் மாதிரி கிடையாது..! – ஓப்பனாக பதில் சொன்ன அட்லீ!

Atlee
ஜவான் படம் ரிலீசாகியுள்ள நிலையில் தன் மீது அதிகமான விமர்சனங்கள் வருவது குறித்து இயக்குனர் அட்லீ பேசியுள்ளார்.



தமிழ் சினிமாவில் ராஜா ராணி மூலம் அறிமுகமாகி இன்று ஜவான் மூலமாக தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. எவ்வளவு உயரங்களை அட்லீ தொட்டாலும் எதிர்கொள்ளும் விமர்சனம் மற்ற படங்களில் இருந்து காட்சிகளை எடுத்து தன் படத்தில் காட்சியாக்குகிறார் என்பது.

முன்பு அட்லீ இயக்கிய ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அந்த படத்தில் உள்ள காட்சிகள் வேறு எந்தெந்த படங்களில் இடம்பெற்றுள்ளன என்று கண்டுபிடித்து சொல்வதை வாடிக்கையாகவே சினிமா ரசிகர்கள் பலர் கொண்டிருந்தனர். தற்போது ஜவான் படத்தின் கதையில் அட்லீயின் முந்தைய படங்களின் கதைகளே கலவையாக இருப்பதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அதுவும் ஜவானில் வரும் தீபிகா படுகோனும், மெர்சலில் வரும் நித்யா மேனன் கதாப்பாத்திரமும் ஒன்றுதான் என பேசிக் கொள்ளப்படுகிறது.



தனது இந்த கதை காப்பி மேட்டர் அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் அதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் அட்லீ “ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பது மட்டும்தான் என்மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம். கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் போன்ற நண்பர்கள் ஆக்‌ஷன், சமூக பிரச்சினைகள் என வெவ்வேறு விஷயங்களை மையப்படுத்தி படம் எடுக்கிறார்கள்.

ஆனால் நடிகர்களை மையப்படுத்தி மாஸ் கமர்ஷியல் திரைக்கதை எழுதுவது நான் ஒருவன் மட்டும்தான் என நம்புகிறேன். எனவே என்மீது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தருவதும், என்னுடைய கேரக்டர்கள் மூலமாக அவர்களை உணர்ச்சிவசப்படுத்துவதும்தான் என் நோக்கம். அதை இதுவரை சரியாகவே செய்து வந்திருக்கிறேன் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K