அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸுக்கும் வந்தாச்சு சென்ஸார்?
அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் தங்களது படைப்புகளை சுய தணிக்கை செய்து கொள்ள ஒத்துக்கொணடுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
திரையரங்குகளுக்கு அடுத்தபடியாக படங்களை ரிலீஸ் செய்வதில் நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரிமிங்க் நெட்வொர்க்குகள் கால்பதித்துள்ளன. திரையரங்குகளைப் போல படங்களோ அல்லது வெப் சீரிஸ்களோ இவற்றில் சென்சார் செய்யப்படுவதில்லை என்பதால் இதற்கு சினிமா ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் இவற்றின் படைப்புகளில் நிர்வாணக் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் மற்றும் மதம், கடவுள் பற்றிய சர்ச்சையானக் கருத்துகளும் இடம்பெறுவதால் பலத்த எதிர்ப்பையும் ஒருங்கே சம்பாதித்து வருகின்றன. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸின் முதல் இந்திய நேரடி படைப்பான சேக்ரட் கேம்ஸ் என்ற சீரிஸில் இதுபோல நிர்வானக் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் மற்றும் வட இந்தியாவில் ஊடுருவி உள்ள மத அரசியல் போன்றவற்றை வெளிப்படையாக பேசியதால் அதற்கு பல தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் இதுதொடர்பான வழக்கு ஒன்றையும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.
அதனால் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை இதுபோன்ற ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்குகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அந்த கட்டுப்பாடுகள் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் நெட்பிளிக்ஸ் இந்த தகவல்களை மறுத்துள்ளது.