வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 25 ஜூலை 2015 (11:57 IST)

பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதல் - ஜுலை 27 முதல் படப்பிடிப்புகள் ரத்து

தமிழ் சினிமாவின் சாபக்கேடான வேலைநிறுத்தத்தை நோக்கி மீண்டும் தயாரிப்பாளர்கள் நெருக்கி தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருமுறை வேலைநிறுத்தம் அறிவிக்கப்படும் போதும் அதற்கு காரணமாக தெனிந்திய தொழிலாளர் சம்மேளனமான பெப்சியே இருந்துள்ளது. இம்முறையும் அப்படியே.
 
வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கை கீழே.
 
"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையிலான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில், தொழிலாளர்கள் சம்மேளனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக புதிய ஊதிய உயர்வினை அறிவித்துள்ளனர். இது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சியாகவும், மன உளைச்சலையும் தந்துள்ளது. 
 
இதனால் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களும், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டும், நசிந்து கிடக்கும் தயாரிப்புத் தொழிலின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வருகிற 27-07-2015 திங்கட்கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் பேச்சுவார்த்தை முடிவடையும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
 
 மற்ற விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அங்கத்தினர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
 
- இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.