தர்பாரை தள்ளி போடுங்க ப்ளீஸ்! – ரஜினிக்கு இயக்குனர் கோரிக்கை!
ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க வேண்டுமென இயக்குனர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. நீண்ட நாட்கள் கழித்து ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9ம் தேதியே ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும் என்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘பிழை’. ஆர். தாமோதரன் இயக்கியுள்ள இந்த படமும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இதுதவிர வேறு சில சிறிய பட்ஜெட் படங்களும் ஜனவரி 9ம் தேதியில் வெளியாக உள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் தாமோதரன் ”ஜனவரி 9ல் தர்பார் வெளியானால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது. மேலும் வசூல் ரீதியாகவும் சிறிய படங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே தர்பார் படத்தை பொங்கல் அல்லது போகி பண்டிகை அன்று வெளியிட்டால் எங்களை போன்ற சிறிய படங்களுக்கு உதவியாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.