நமக்கு தேவையானதை நாமதான் எடுத்துக்கணும்: ‘அசுரன்’ டிரைலர்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
கிட்டத்தட்ட ‘வடசென்னை’ போலவே வன்முறை அதிகமாக இருக்கும் படம் போல் தெரிகிறது. டிரைலரில் உள்ள பெரும்பாலான காட்சிகளில் தனுஷ் கையில் அரிவாளுடன் தான் இருக்கின்றார். ‘தலையை மட்டும் தனியா எடுத்திட்டு வந்திருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்று மஞ்சுவாரியர் கூறும் வசனத்தில் இருந்து அவருக்கும் வன்முறை காட்சிகள் இருக்கும்போல் தெரிகிறது
’நமக்குத் தேவையானதை நம்ம தான் எடுத்துக்கிடனும் என்ற வசனத்தில் இருந்து நீண்டகாலமாக அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு பிரிவினர் பொங்கி எழும் கதை என தெரிகிறது. நம்ம கிட்ட இருக்குற காசு, பணம் எல்லாத்தையும் புடுங்கிக்கிடுவாங்க, ஆனால் நம்மகிட்ட இருக்குற படிப்பை மட்டும் யாராலும் புடுங்க முடியாது என்ற வசனத்தில் இருந்து ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டெழ ஒரே வழி கல்விதான் என்பதை வலியுறுத்தும் படமாக இது இருக்கும் என கருதப்படுகிறது
ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை, தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் அருமையான ஒளிப்பதிவு என் ‘அசுரன்’ டீம் கடுமையாக ஒவ்வொரு பிரேமிற்காகவும் உழைத்துள்ளனர் என்பது தெரிகிறது. மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் இந்த படம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது