வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (10:08 IST)

கான் திரைப்படவிழா - எழுத்தாளர் ஷோபாசக்தி நடித்த தீபன் படத்துக்கு விருது

இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரா கருதப்படுகிறவர் ஷோபாசக்தி. புலம்பெயர் தமிழரான இவர் தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். இவரது கொரில்லா, ம் நாவல்கள், கண்டிவீரன் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரை தொகுப்பான வேலைக்காரிகளின் புத்தகம் முதலானவை குறிப்பிடத்தகுந்தவை. ஷோபாசக்தியின் பெரும்பாலான எழுத்துகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனம் பெற்று வருகின்றன.
 
லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் படத்துக்கு கதை மற்றும் வசனத்தில் ஷோபாசக்தி பங்களிப்பு ஆற்றியிருந்தார். 1983 -க்கு முன் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பங்குகொண்டு, அவர்களின் சர்வாதிகாரம் காரணமாக அதிலிருந்து வெளியேறி இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இரு தரப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறவர்.
 
இலங்கை உள்நாட்டுப் போரை மையமாக வைத்து பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குனர் ஜாக்யூஸ் அடியார்ட் பிரெஞ்ச் மொழியில் இயக்கிய தீபன் படத்தில் ஷோபாசக்தி, சென்னை நாடக நடிகை காளீஸ்வரி முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விமர்சகர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது.