1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (14:00 IST)

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட கவுதமி

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் நடந்தது. முகாமில் கலந்து கொண்ட நடிகை கவுதமி விழாவினை தொடங்கிவைத்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என பேசினார்.

 
இந்த முகாமில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சவுமியா அன்புமணி, விமான நிலைய ஆணையக இயக்குனரின் மனைவி சியாமவுலி சாஸ்திரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இதனை தொடர்ந்து பேசிய கவுதமி‘ஆரோக்கியமான உணவு உள்பட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் தடுக்கப்பட்டு வருகிறது. பல வகையான புற்றுநோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நவீன முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 
மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவர். பெண்கள் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டால்தான் ஆரம்ப நிலையை கண்டறிந்து குணமாக்க முடியும். எனவே பெண்கள் விழிப்புணர்வுடன் பரிசோதனை மேற்கொண்டு தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.