செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:00 IST)

ஆட்டம் காட்ட வருகிறாள் லேடி ஜோக்கர்! – 18+ களுக்கான சூப்பர் ஹீரோ படம்!

சூப்பர்ஹீரோ படங்களில் பிரபலமான வில்லி கதாப்பாத்திரமான ஹேர்லி குயின் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டிலிருந்து உலகம் முழுவதும் பிரபலமாக உற்று நோக்கப்படுபவை மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ். இந்த காமிக்ஸ்களில் உள்ள கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன், வெப்சிரீஸ், திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு பேட்மேனின் பரம வைரியான ஜோக்கரின் முன்கதை குறித்து வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் மார்வெல் படங்களுக்கு நிகராக சாதனை செய்தது.

இந்நிலையில் ஜோக்கரின் காதலியாக காமிக்ஸில் வரும் ஹேர்லி குயின் என்ற கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ என்ற படத்தை தயாரித்துள்ளது வார்னர் ப்ரதர்ஸ். ஜோக்கரை விட்டு காதலில் பிரிந்த ஹேர்லி குயின் குற்ற செயல்களில் ஈடுபட்டு பெரிய வில்லியாக மாறுவது இந்த படத்தின் கதை கருவாக உள்ளது.

கேத்தி என் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் சூசைட் ஸ்குவாடில் ஹேர்லி குயினாக நடித்த மார்கரெட் ரப்பி அதே பாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், காமம், குரோதம், போதை என பலவிதங்களில் சுழலும் இந்த கதை குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்ற கதை அல்ல என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்திற்கும் 18+ சான்று வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.