செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (14:39 IST)

மீராமிதுனுக்கு கண்டனம், விஜய்-சூர்யாவுக்கு குட்டு: பாரதிராஜாவின் அறிக்கை

கடந்த சில நாட்களாக விஜய், சூர்யா குறித்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வரும் மீராமிதுனுக்கும், விஜய், சூர்யா ரசிகர்கள் எல்லைமீறி ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து வருவதை விஜய், சூர்யா கண்டிக்காதது குறித்தும் இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
என்‌ இனிய தமிழ்‌ மக்களே... வணக்கம்‌! சமீபமாக கேட்கும்‌ அல்லது பார்க்கும்‌ பல சம்பவங்கள்‌ அதிர்ச்சியைத்‌ தருகிறது. புகழ்‌ போதையில்‌ ஒருவரையொருவர்‌ இகழ்வதும்‌, இன்னொருவரின்‌ தனிப்பட்ட
வாழ்க்கையைப்‌ பற்றி அவதூறு பேசுவதும்‌ அதை சமூக ஊடகங்கள்‌ வெளிக்கொணர்வதும்‌ கண்ணாடி விட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப்‌ போலவும்‌, மல்லாக்க படுத்துக்‌ கொண்டு எச்சிலை உமிழ்வதைப்‌ போலவும்‌ தமிழ் சினிமா வெளியில்‌ அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம்‌ தொடங்கியுள்ளதோ என ஐயம்‌ கொள்கிறேன்‌.
 
ஒருவரையொருவர்‌ மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர்‌ மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம்‌ கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும்‌ சேர்ந்துகொள்கிறது. இதோ, நம்‌ அன்புத்‌ தம்பி விஜய்‌, சூர்யா போன்றோர்‌ எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்‌... கவர்ச்சிகரமான இந்தத்‌ துறையில்‌ தன்‌ பெயர்‌ கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள்‌ வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்‌? திருமணம்‌ செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர்‌ என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின்‌ வாழ்க்கை நம்‌ முன்‌ கண்ணாடி போல்‌ நிற்கிறதே... !! அழகிய ஓவியத்தின்‌ மீது சேறடிப்பது போல மீராமிதுன்‌ என்கிற பெண்‌ தன்‌ வார்த்தைகளை கடிவாளம்‌ போடாமல்‌ வரம்புமீறி சிதறியுள்ளார்‌. திரையுலகில்‌ பயணிக்கும்‌ ஒரு மூத்த உறுப்பினனாக நான்‌ இதைக்‌ கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்‌.
 
சிறு பெண்‌, பக்குவமில்லாமல்‌ புகழ்‌ வெளிச்சம்‌ தேடிப்‌ பேசுவதை இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. கவுரமாக வாழும்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தைப்‌ பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள்‌, துறை சார்ந்தவர்கள்‌ வேடிக்கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. இதுவரை பேசியதை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌. சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும்‌ பணி செய்கிறார்‌. சத்தமில்லாமல்‌ விஜய்யும்‌ நிறைய மனிதாபிமானப்‌ பணிகளை மேற்கொண்டு வருகிறார்‌. அப்படிப்பட்டவர்களை, அவர்களின்‌ குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும்‌ மிச்சமிருக்கிறது. உழைத்துப்‌ போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர்‌ வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள்‌ இருக்கிறது. அடுத்தவரைத்‌ தூற்றிப்‌, பழித்து அதில்‌ கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான்‌ இருக்கும்‌. வார்த்தைகள்‌ பிறருக்கு வலியைத்‌ தருவதாக அமையாமல்‌, இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம்‌ ஏற்படுத்தும்‌... பசியைப்‌ போக்கும்‌... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்‌.
 
நம்‌ சகக்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தை அவதூறாகப்‌ பேசியும்‌... நடிகர்‌ சங்கம்‌ மட்டுமல்ல... வேறெந்த சங்கமும்‌ எந்தவிதமான எதிர்க்குரலும்‌ எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின்‌ தலையீட்டை
எதிர்பார்த்திருந்தேன்‌. ஆனால்‌, அசைவில்லை. தேர்தல்‌ நடைபெறாத சங்கம்‌ என்றால்‌, சொந்தத்‌ தேவைகளுக்காகக்‌ கூட கண்டனக்குரல்‌ தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது? யாரோ ஒருவனின்‌ அவமானம்தானே? நாம்‌ ஏன்‌ பேச வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எழுந்தால்‌ நம்‌ வீடு அசிங்கத்தால்‌ அமிழ்ந்துபோகும்‌... அந்த சேறு நாளை உன்‌ மீதும்‌ வீசப்படும்‌ இல்லையா? எல்லோரும்‌ கூடிக்‌ கண்டித்திருக்க வேண்டாமா? சமூக ஊடகங்களும்‌ இப்படிப்பட்ட அவதூறுகளைக்‌ கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
 
முன்பெல்லாம்‌ பத்திரிகை தர்மம்‌ என்ற ஒன்றும்‌... ஊடகங்களும்‌ கலைஞர்களும்‌ ஒரு குடும்பம்‌ என்ற கட்டுக்கோப்பில்‌ இருந்தோம்‌. ஆனால்‌ இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத்‌ தோணுகிறது. மற்றவர்களை அவர்களின்‌ வாழ்க்கை அமைப்பைக்‌ கேலிசெய்யும்‌ வார்த்தைகளை ... எழுத்தைக்‌ கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள்‌ நண்பர்களே... இப்படிப்பட்டவர்களின்‌ ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்‌. அதனால்‌ சமூக ஊடகங்கள்‌ நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள்‌ எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
 
உயரத்திலிருக்கும்‌ நட்சத்திரங்களின்‌ ரசிகர்களின்‌ பின்னூட்ட வார்த்தைகளும்‌ மிகக்‌ கேவலமாகவும்‌ ஆபாசமாகவும்‌ இருப்பதைக்‌ கவனித்தே வருகிறேன்‌. நடிகை கஸ்தூரி போன்றோர்‌ அதற்கு இலக்காகி உள்ளனர்‌. ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்‌... நமக்கென்ன என நட்சத்திரங்களும்‌ அமைதியாக வேடிக்கைப்‌ பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க
முயற்சியெடுக்க வேண்டியது உங்கள்‌ ஒவ்வொருவரின்‌ கடமையும்‌ கூட... சமூக வலைத்தளங்களில்‌ ரசிகர்கள்‌ பயன்படுத்தும்‌ வார்த்தைகள்‌ படிக்கக்‌ கூசும்‌ கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்‌. அந்த ரசிகன்‌ எங்கிருந்தோ கழிவின்‌ மீது கல்லடிக்கிறான்‌. பாருங்கள்‌, அது நம்‌ விட்டு அடுப்படியில்‌ நாறுகிறது. உங்கள்‌ பெயரும்‌ புகழும்‌ நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள்‌ உச்ச நட்சத்திரங்களே... என்‌ போன்றோருக்கு உங்கள்‌ மீது தூசு விழுந்தாலும்‌ உத்திரம்‌ விழுந்தது போல்‌ வலிக்கிறது
|
இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.