1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (07:05 IST)

என்னை கேட்காமல் என் பெயரை எப்படி போடலாம்? பாரதிராஜா ஆவேசம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 42 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து உள்ளனர். இந்த குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பேசித் தீர்ப்பார்கள் என்றும் இந்த அனுபவம் வாய்ந்த குழுவால் தமிழ் திரையுலகில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் கூறி ஒரு அறிக்கை வெளியானது
 
இந்த அறிக்கையில் பாரதிராஜா உள்பட பலரது பெயர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த குழுவில் தன்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
முன்னாள்‌ தலைவர்கள்‌ அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப்‌ பட்டியலொன்றும்‌ அதனோடு சேர்ந்த அறிக்கையும்‌ பத்திரிகைச்‌ செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. நாகரீகம்‌ என்பது பெயரைப்‌ பயன்படுத்தும்‌ முன்‌ அனுமதி கேட்பது. ஆனால்‌ நான்‌ அறியாமல்‌ எனது பெயரைப்‌ பயன்படுத்தியது சரியல்ல.
 
தேர்தல்‌ தள்ளிப்‌ போடப்பட்ட நிலையில்‌ பொதுவில்‌ அனைத்து உறுப்பினர்களின்‌ ஆதரவை தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத்‌ தேர்ந்தெடுத்து அவர்கள்‌ திரையுலகின்‌ பிரச்சனையைத்‌ தீர்ப்பார்கள்‌ என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும்‌ என்‌ பெயரை என்னைக்‌ கேட்காமல்‌ பயன்படுத்தியது முற்றிலும்‌ தவறான அணுகுமுறை.
 
பத்திரிகையாளர்கள்‌ இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும்‌ பெறாமல்‌ எனது பெயரைப்‌ பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.
 
பாரதிராஜாவின் இந்த அறிக்கையால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது