1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (12:44 IST)

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சாதனை ‘6 அத்தியாயம்’ - இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சாதனை ‘6 அத்தியாயம்’ படம் என இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.


 

 
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சிதான் '6 அத்தியாயம்'. பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
 
இந்தப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு  திரையிட்டு காட்டப்பட்டது.  படம் பார்த்துவிட்டு அவர் பேசியதாவது:
 

 
“பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள். சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன். ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். 
 
இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன். இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன். 
 


 
பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன். காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள். சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த '6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன். 
 
எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்... இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்றுதான் நானே மைக் பிடித்தேன். 
 
இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை  எப்படி ஒன்று சேர்ப்பது? ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும்போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்துப் பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள். 
 
இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகை பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள். 
 
குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டுவரமுடியும். உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. 6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி பேசினார் பாரதிராஜா.