’புஷ்பா 2’ படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
புஷ்பா 2 திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில், இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பதும், இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் நேற்று திரையிடப்பட்டு கொண்டிருந்த நிலையில், அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். திரையரங்கில் ஒருவர் உயிரிழந்தும் கூட, படத்தை நிறுத்தாமல் இருந்ததாகவும் இதனை அடுத்து திரையரங்கு ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து, திரைப்படத்தை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இன்னொரு ரசிகர் திரையரங்கில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran