செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

" கதறி பாலுக்கு அழுவுது நான் பெத்த புள்ள " - அறந்தாங்கி நிஷாவின் உருக்கமான பாடல்!

விஜய் டி.வியின் “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் அறந்தாங்கி நிஷா. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா...’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து அதிரடியாக உள்ளே புகுந்தவர் நிஷா
கஜா புயலினால் காற்றில் பறந்த  நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிஷா தேவையான உதவிகளை நேரில் சென்று செய்துவந்தார். மேலும் வாழ்க்கையை முற்றிலும் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா சமீபத்தில் தன் ரசிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமாக வீடியோ ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
 
ஆனால் அப்போது ஒரு ரசிகர் செய்த செயல் நிஷாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. நிஷாவின் அந்த வீடியோவை பார்த்து "பிச்சை எடுக்கிறீர்களா" என நக்கலான கருத்தை ரசிகர் ஒருவர் பதிவு செய்து நிஷா காயப்படுத்தியுள்ளார். அந்த நபரை பலரும் கடுமையாக திட்டி தீர்த்தனர்.  
 
அதற்கு தக்க பதிலடி கொடுத்த நிஷா  "ஆமா.. பிச்சைதான் எடுக்கிறேன்.. எனக்கு வாழ்க்கை போட்டவங்களுக்கு நான் பிச்சை எடுக்கிறது தப்பில்லை" என்று பதிலளித்து தொடர்ந்து நிவாரண பணியில் மூழ்கினார் .அது இணையத்தில் மிகுந்த வைரலாக பரவியது 
இந்நிலையில் தற்போது அறந்தாங்கி நிஷா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக "அரசியல் இல்ல.. சாதி சமயமும் இல்ல, புரட்டி எடுத்து போயிருச்சு... சமமா புள்ள!!" என்று ஒரு பாடல் பாடி வீடியோவாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு அந்த வீடியோ இணையத்தில் ஒலித்து கொண்டிருக்கிறது. 
 
கஜா புயல் பாதிப்பு ஆரம்பத்திலிருந்தே நிஷாவின் செயல்பாடுகளில் அப்படி ஒரு வேகம்.. பரபரப்பு... சுறுசுறுப்பு!! தன் மாவட்ட மக்கள் என்றால்கூட பரவாயில்லை... ஆனால் நிஷா டெல்டா வாசிகளிடமே சரணடைந்து விட்டார்.
 
மேலும் தன் வீடு, வாசல், குடும்பம், பிழைப்பு என எல்லாத்தையும் விட்டுவிட்டு, இவர் மக்களை தேடி நிவாரண பொருட்களுடன் ஓடினார். அவர் போகும் இடமெல்லாம் நகர பின்னணியுடையது இல்லை. எல்லாமே மூலையில் கிடந்த கிராமங்கள்தான். நிவாரண முகாம்கள் உட்பட கோயில்களில் தஞ்சமடைந்தவர்களை எல்லாம் சந்தித்து ஆறுதல் கூறி என்ன தேவை என்பதை கேட்டு வந்தார்.
 
இப்போது ஒரு பாடலையும் வெளியிட்டுள்ளார். நிஷா பாட்டு பாடுவாரா என்றுகூட யாருக்கும் இதுவரை தெரியாது. ஆனால் இந்த பாடலை நிஷாதான் பாடி உள்ளார். கஜா புயல் பாதிப்பு குறித்த வரிகள் அதில் இடம் பெற்றுள்ளன. "அரசியல் இல்ல.. சாதி சமயமும் இல்ல, புரட்டி எடுத்து போயிருச்சு... சமமா புள்ள!!" என்று அந்த பாடல் பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தை, சுமையை, வேதனை தாங்கி வருகிறது.
 
பாடல் பின்னணியில், புயலால் சிதிலமடைந்த வீடுகள், மூழ்கி கிடக்கும் பயிர்கள், கதறும் மக்கள், தட்டையேந்தி சாப்பாடு கேட்கும் குழந்தைகள் என காட்சிகள் வந்து போகின்றன. இந்த பாடல்தான் இப்போது பிரபலமாகி வருகிறது. இந்த பாடல் முடிந்தபிறகு நிஷா அதே வீடியோவில் பேசுகிறார். "அடுத்தவேளை சாப்பாடு யார் குடுப்பாங்கன்னு விவசாயியை கையேந்துற நிலைமைக்கு விட்டது யார்?
தன் பிள்ளையை விட அதிகமாக பாசம் காட்டி வளர்த்த ஆடு, மாடு, நாய், எல்லாமே செத்து போச்சு. தன் பிள்ளையை கூட நம்பாம தென்னையை நம்பி வாழ்ந்த கிராமத்தில் தென்னம்பிள்ளையும் செத்து போச்சு. ஒவ்வொரு நாளும் நடுரோட்டில படுத்து தூங்கற அவல நிலையை கொடுத்தது யாருங்க?
 
தங்கள் எதிர்காலம் என்னன்னுகூட தெரியாம இருட்டுக்குள்ள வாழ்ந்துக்கிட்டு இருக்காங்களே, அந்த வாழ்க்கைகெல்லாம் அர்த்தம் என்னங்க? அவங்களுக்கு உதவி செய்ய போறது யார்? எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனம் நம்மள வெச்சி அவங்க சம்பாதிச்சிக்கிட்டு, இன்னைக்கு நமக்கு பதில்கூட சொல்லாம ஒளிஞ்சு கிடக்கறாங்க!!
 
தங்களின் வாழ்க்கையை முற்றிலும் இழந்து கிடக்கும் டெல்டா விவசாயிகள், மீனவர்களுக்கு திரும்பவும் அவங்க வாழ்ந்த வாழ்க்கையை மீட்டு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்துக்கு இருக்கிறது. அதை நாம மீட்டு தருவோம். ஒன்று சேர்ந்து இணைவோம்!" என்று நிஷா பேசியுள்ளார்.
 
இந்த புனிதமான செயலால் பலரின் பாராட்டுகளை பெற்றுவரும் நிஷா தன் தரத்தை மேலோங்கி நிற்க வைத்துள்ளார்.