1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:33 IST)

திருநங்கைகளுக்கு ஆதரவு - சக நடிகைகளுக்கு விசாகா சிங் அழைப்பு

நடிகை விசாகா சிங் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். இப்போது அதே டீமுடன் வாலிப ராஜா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமல், ப்ரியா ஆனந்துடன் நடிக்கிறார்.
இந்த மூன்று தகவல்களுக்கு மேல் விசாகா சிங் குறித்து பலருக்கும் தெரியாது. முக்கியமாக டார்க் இஸ் பியூட்டிஃபுல் அமைப்பில் விசாகா சிங் ஓர் அங்கத்தினர் என்பது இன்னும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமலே உள்ளது.

மாடலிங் உலகில் முன்னணியில் இருக்கும் கறுப்பழகி நவோமி கேம்பல் இந்தியா வந்த போது ஆச்சரியத்துடன் கேட்டது, கறுப்பு நிறமுடைய இந்தியர்களில் ஒரு கறுப்பு நிறமுடைய மாடல்கூட இல்லையே?

சிவப்புதான் அழகு என்று இந்திய மனங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. கறுப்பு பேரழகு என்பதை உணர மறுத்ததன் விளைவாகதான் இங்கு சிகப்பழகு க்ரீம்களின் கோடிக்கணக்கான வர்த்தம் செழித்து வளர்ந்துள்ளது. அதனை மறுத்து கறுப்பும் அழகுதான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் டார்க் இஸ் பியூட்டிஃபுல் அமைப்பின் நோக்கம். இதில் நந்திதா தாஸ் போன்ற பிரபலங்களும் உறுப்பினர்கள்.

சமீபத்தில் விசாகா சிங் கோவையில் நடந்த விடியாத விடுதலை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். திருநங்கைகளுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. அதனால் பாலியல் தொழிலை மட்டும் செய்யும்படி அவர்களை சமூகம் மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறது.

திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். என்னைப் போல பிற நடிகைகளும் திருநங்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தெருநாய்களுக்கு காண்பிக்கும் கரிசனத்தில் சிறு பகுதியை நடிகைகள் திருநங்கைகள் விஷயத்தில் காட்டினால் அவர்களின் வாழ்வு மேம்படும்.