விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி “திருக்குறள்”ல இருந்து தூக்குனதா? – வைரலாக்கும் நெட்டிசன்கள்!
நேற்று நடந்த லியோ வெற்றி விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா என பல பிரபலங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பட விழாவில் நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். அப்படியாக இந்த விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அந்த கதை “ஒரு நாள் ரெண்டு பேரு காட்டுக்கு போனாங்கலாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகுன்னு நிறைய இருந்துச்சாம். ஒருவர் முயலை பிடித்துக் கொண்டு வந்தார். இன்னொருவர் எதுவுமே பிடிக்காமல் வந்தார். ஆனால் அவர் யானைக்கு குறி வைத்திருந்தார். முயலை பிடித்து வந்தவரை விட யானைக்கு குறி வைத்தவர் தான் முக்கியமானவர். எப்போதுமே நம்ம முயற்சி பெரிதாக இருக்க வேண்டும்” என்று இருந்தது.
இந்த யானை, முயல் ஒப்பீடு கதை அப்படியே திருக்குறளில் உள்ளது. திருக்குறளின் பொருட்பாலில் படைச்செருக்கு என்ற அத்தியாயத்தில் 772வது குறளாக இது இடம்பெற்றுள்ளது.
“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”
விளக்கம்: காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
இந்த குறளும் அதன் விளக்கமும் தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் இதை திருக்குறளில் படித்திருந்தால்.. இது திருக்குறளில் உள்ளது என மேடையில் சொல்லி இருந்தால் பலரும் திருக்குறளை படிக்க இது ஒரு தூண்டுதலாக இருந்திருக்குமே” என்று தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.
Edit by Prasanth.K