திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:17 IST)

அரசியலில் நுழைய நடிகர் ரஜினி ரெடி ! அடுத்து கட்சி அறிவிப்பு எப்போது ?

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என அவரது தொண்டர்களுமே ஆவலாக காத்திருக்கிறார்கள். கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பதாக சில ஆண்டுகள் முன்பு சொல்லியிருந்த ரஜினிகாந்த் சில மாதங்கள் முன்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க போவதில்லை என்றும், அதேசமயம் தமிழக அரசியலில் மாற்றம் தேவை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் விரைவில் கட்சி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சி தொடங்க வலியுறுத்தி அவரது தொண்டர்கள் பலர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ரஜினி தொண்டர்கள் “மாற்றத்தை சிந்திக்கும் மக்களும்.. மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால் அரசியல் மாற்றம்! ஆட்சி மாற்றம்! இப்ப இல்லனா எப்பவுமே இல்ல” என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதேசமயம் கட்சி தொடங்குவதற்கான பணிகளும், உறுப்பினர் சேர்க்கை பணிகளும் நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் தமிழக மூத்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துள்ளார் ரஜினி. அதில், கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும், கட்சிக்கு செல்வாக்கு இருக்குமா? ஆட்சியைப் பிடிக்க முடியுமா?  அரசியல் கட்சிகள் எப்படி விமர்சிக்கும் என்ற விவரங்களை அவர் கேட்டுள்ளார். இதற்கிடையே ராகவா லாரன்ஸ் எனது குருவின் கட்சியில்  நேர்மறை அரசியலில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  எப்படியும் ரஜினி கட்சியை வரும் டிசம்பர் 12 ஆம் நாள் துவங்குவார் என்றே அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.