வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 18 ஜூன் 2014 (15:17 IST)

வெங்கடேஷின் மகனும் இப்போது நடிகர்

நடிகர்களின் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இந்திய சினிமா. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் எங்கும் எதிலும் வாரிசுகளின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தெலுங்கு திரையுலகம்.
 
மூன்று தலைமுறைகளாக சினிமா நடிகர்களின் வாரிசுகள்தான் இங்கே கோலோச்சுகிறார்கள். சமீபத்தில் நாகார்ஜுன் - அமலா தம்பதியின் மகன் ஹீரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தமானார். இப்போது வெங்கடேஷின் மகனின் முறை.
புகழ்பெற்ற தயாரிப்பாளர் ராமநாயுடுவின் மகன்தான் வெங்கடேஷ். அவர் இந்தியில் வெளியான ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக் கோபாலா கோபாலாவில் நடிக்கிறார். ஓ மை காட் படத்தில் பரேஷ்ராவல்தான் ஹீரோ. அவர் நடித்த வேடத்தை தெலுங்கில் வெங்கடேஷ் செய்கிறார். இந்தியில் கடவுள் கிருஷ்ணராக அக்ஷய் குமார் நடித்த கௌரவ வேடத்தை தெலுங்கில் செய்கிறவர் ஆந்திராவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.
 
இருபெரும் ஸ்டார்கள் இணையும் இந்தப் படத்தில் வெங்கடேஷின் மகன் அர்ஜுன் டகுபதியை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. படத்தில் வெங்கடேஷின் மகனாக அர்ஜுன் நடிப்பார் என தெரிகிறது.
 
சிரஞ்சீவி, நாகார்ஜுன் போன்றவர்களின் மகன்கள் ஆந்திர சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் வேளையில் வெங்கடேஷின் மகனும் சினிமாவுக்குள் நுழைகிறார். இன்னும் சில வருடங்களில் அவரும் தனி ஹீரோவாகிவிடுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.