வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2014 (12:51 IST)

விதானகேயின் With you Without you திரைப்படம் சென்னையில் இலவச திரையிடல்

சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யு விதவுட் யு திரைப்படம் இன்று மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் இலவசமாக திரையிடப்படுகிறது. திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பாக தமிழ் ஸ்டுடியோ இந்த திரையிடலை முன்னெடுத்துள்ளது.
 
பிரசன்ன விதானகேயின் இந்தப் படம் சென்னையில் உள்ள இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட இருப்பதாக அறிந்த தமிழ்த் தேசியவாதிகள் சிலர் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு, படத்தை திரையிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மீறினால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினர். 
 
இதன் காரணமாக இரு திரையரங்குகளும் படத்தை திரையிடுவதிலிருந்து பின்வாங்கின. தமிழ்த் தேசியவாதிகளின் இந்த செயல் முழுக்க அறியாமையிலும், எதையும் அறிந்து கொள்ள விரும்பாத விருப்பமின்மையிலும் விளைந்தது. 
 
குறிப்பிட்ட படத்தில் போரினால் ஈழப்பெண் அடையும் வேதனைகள், நெருக்கடிகள் எந்த அலங்காரமுமின்றி காட்டப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று படத்தில் சுட்டிக் காட்டியிருப்பதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறை செய்யும் காட்சிகளும் படத்தில் வைக்கப்பட்டுள்ளன. எல்லா வகையிலும் தமிழர்களின் உணர்வை பெண்ணியப் பார்வையில் முன் வைக்கும் முக்கிய திரைப்படம் இது என யமுனா ராஜேந்திரன் போன்ற விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். 
 
தமிழ்த் தேசியவாதிகளால் திரைப்படம் நிறுத்தப்பட்டது தமிழர்கள் குறித்த கசப்பான எண்ணத்தையே தோற்றுவிக்கும். உண்மையை உணர மறுப்பதைப் போல் வரலாற்றுப் பிழை வேறு இருக்க முடியாது. தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்பால் இன்று மாலை 7 மணிக்கு வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் இப்படம் இலவசமாக திரையிடப்படுகிறது. திரையிடலில் பிரசன்ன விதானகேயும் கலந்து கொள்கிறார். படம் முடிந்ததும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். 
 
முக்கியமான நிகழ்வு, மாற்றுக் கருத்து உள்ளவர்களும் திரையிடலில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை அமைதியான முறையில் முன்வைக்கலாம், தெ‌ளிவு பெறலாம்.