வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2014 (17:24 IST)

வளைகுடா சொர்க்கத்தில் தயாரான மணல் நகரம்

பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்குச் செல்வதுண்டு. ஒரு முழுப்படமே வெளிநாட்டில் உருவாகியுள்ளது. அது 'மணல் நகரம்'
 
பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது 'மணல் நகரம்'
'ஒருதலைராகம்' சங்கராக அறியப்பட்டு 200 படங்களுக்கு மேல் தமிழ், மலையாளம் என்று நடித்திருக்கும் நடிகர் சங்கர்,இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களை இயக்கியுள்ளவர்.
 
'மணல் நகரம்' படத்தை டிஜேஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த் குமார் தயாரித்துள்ளார்.
 
துபாயில் மூன்று நண்பர்கள் குடும்ப வறுமையால் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காகச் சென்று வேலைபார்த்து வருகிறார்கள். ஒரே அறையில் தங்கி வசிக்கிறார்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதம் மறந்து ஒன்றாக இருக்கிறார்கள்.
 
துபாயில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்குப் படுகிற போராட்டம்தான் கதை.
 
படத்தில் நட்பு, காதல் எல்லாம் உள்ளன. துபாயில் ஒரு பெண்ணைக் காதலிப்பதால் காதலர் இருவர் சந்திக்கும் பிரச்சினைகளும் காட்டப் பட்டுள்ளன.
 

நம் நாட்டைப் போன்றதல்ல துபாயின் சட்ட திட்டங்கள். இந்தியா போல அங்கு எளிதில் பெயிலில் வரமுடியாது. ஏதாவது வழக்கென்றால் அரபி மொழி தெரிந்த வழக்கறிஞரை வைத்துதான் வாதாட முடியும். அதனால் தகவல் தொடர்பு பிரச்சினை இருக்கும்.வழக்கறிஞர் கட்டணம் மிக அதிகம். இதுபோல பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏதாவது பிரச்சினை வழக்கு என்று போய்விட்டால் சமாளிப்பது வெளிவருவது சாதாரணவிஷயமல்ல. அதையும் சொல்கிறது படம்.
வெயில் தேசத்தில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சங்கர் கூறும் போது
 
"துபாயில் சட்டம் கடுமையாக இருக்கும். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவது கூட முன்பு போல இப்போது இல்லை. விதிகளை கடுமையாக்கி இருக்கிறார்கள். சிலர் அங்கு படமெடுத்துவிட்டு வெளியேபோய் அதை தவறாக சித்தரித்ததுண்டு. தவறான காட்சிகளுக்கு நாட்டை பயன்படுத்தி இருப்பது கண்டு விதிகள் கடுமையாக்கி இருக்கிறார்கள். அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்றால் எங்கு எடுக்கப் போகிறோம் என்ன காட்சி என்று சொல்ல வேண்டும். படத்தின் முழு கதையையும். அரபியில் மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும் அதைப் படித்து நம்மை படப்பிடிப்புக்கு அனுமதிப்பது பற்றி அந்த மீடியா ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும்" என்கிறார்.
 
அங்கு இவ்வளவு விதிமுறைகள் இருக்கிறதாம். சிரமப்பட்டு அனுமதி பெற்று துபாயின் பெரிய பெரிய கட்டடங்களை எல்லாம் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.
 
துபாயின் மலைப் பிரதேசங்களைக் கூட விட்டு வைக்காது கேமராவுக்குள் சிறைப்பிடித்து வந்துள்ளனர்.
 
இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கென்று இந்தியாவிலிருந்து மூன்றே பேர்தான் போயிருக்கிறார்கள். மற்ற அனைவரும் துபாய் நாட்டில் உள்ளவர்களே.
 
இங்கிருந்து நாயகன் ப்ரஜின், நாயகி தனிஷ்கா, கௌதம் என மூவர் மட்டுமே சென்றுள்ளனர். 
 
நாயகனான ப்ரஜின் சன் டிவி வீடியோ ஜாக்கியாக இருந்தவர். தமிழில் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' படத்திலும் மலையாளத்தில் 'த்ரில்லர்' 'டோர்னமெண்ட்' படங்களிலும் நடித்து இருப்பவர். ஒரு நாயகியான தனிஷ்கா பெங்களூர்க்காரர். கன்னடத்தில் 10 படங்கள் நடித்துள்ளவர்.
 

இன்னொரு நாயகியாக நடிக்கும் வருணா ஷெட்டி துபாயில் பிறந்து வளர்ந்தவர். அவரைத் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.
 
நாயகன் நண்பனாக உடன் வரும்  ஜேம்ஸ் என்கிற முக்கிய பாத்திரத்துக்கும் துபாயிலுள்ள ஒருவரையே தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளார்கள்.
 
பிற துணைப் பாத்திரங்கள், கூட்டம், கும்பல் எல்லாம் அங்குள்ளவர்களே பயன்படுத்தப் பட்டுள்ளனர். 
படத்துக்கு ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசை ரெனில் கௌதம், பாடல்கள்-மணிபாரதி, ராஜ்கண்ணன், தமிழமுதன், வசனம் - ஆர்.வேலுமணி, படத்தொகுப்பு- எஸ்பி.அகமத், நடனம்- சோனி மோகோஸ், ஜீவித், ஸ்டண்ட்- ராஜேஷ் கண்ணா.
 
இது நண்பர்கள் பற்றிய கதை என்றாலும் நட்பு நேசத்துடன் காதல் வாசமும் உண்டு.
 
'மணல் நகரம்' படத்துக்கு துபாயில் 52 நாட்கள் நடத்தி படப்பிடிப்பு முழுப்படத்தையும் எடுத்து முடித்து உள்ளனர். 
 
கதை முழுதும் துபாயில்தான் நடக்கிறது. துபாயில் சிரமப்படும் பாத்திரங்களின் குடும்பச் சூழல் காட்ட மட்டும் சில நிமிடங்கள் மட்டுமே இந்தியா காட்டப்படும்.
 
வெயில் தேச படப்பிடிப்பு அனுபவம் பற்றி இயக்குநர் கூறும் போது "படக்கதை நடந்த உண்மைக்கதையின் அடிப்படையிலானது. எல்லாவற்றையும் கற்பனையாகக் காட்டலாம். ஆனால் துபாயை கற்பனையாகக் காட்ட முடியாது. துபாய் என்பது இந்தக்கதைக்கு மிகவும் வலுவான பலமான பின்புலமாக இருக்கும். அது ஒரு பாத்திரம் போலவே தோன்றும். எனவே அங்கு படமெடுப்பது என்று முடிவுசெய்து எடுத்தோம். 
 
கொளுத்துகிற வெயிலில் வெளியில் சாலைகளில் கூட்டங்களில் எல்லாம் சிரமப்பட்டு எடுத்தோம். நடிகர்களுக்கு கேரவான் எல்லாம் இல்லை. காருக்குள்ளேயே உடைமாற்றி ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படி அத்தனைபேரும் ஒத்துழைத்து உதவி இருக்கிறார்கள்." என்கிறார். நன்றியுடன். 
 
'மணல் நகரம்' கதை, காட்சிகள், சூழல், பின்புலம் எல்லா வகையிலும் மக்களைக் கவரும் என்று நம்புகிறார். 'ஒருதலைராகம்' சங்கர் என்கிற இயக்குநர் சங்கர்.