வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (15:11 IST)

டைட்டானிக் சாதனையை முறியடித்த தென்னிந்திய திரைப்படம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நூறு நாள்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமை இதுவரை டைட்டானிக் படத்துக்கே இருந்தது. அந்த சாதனையை மோகன்லால் நடித்த ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் முறியடித்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் சென்ற டிசம்பர் மாதம் வெளியானது. ஜார்ஜ் குட்டி என்ற குடும்பஸ்தனாக மோகன்லால் நடித்திருந்தார். அவரது மனைவியாக மீனா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். டீன்ஏஜ் பருவத்திலிருக்கும் மூத்த மகளின் அந்தரங்க வீடியோ ஒரு கயவனிடம் சிக்கிக் கொள்கிறது. அந்த வீடியோவுக்கு பதிலாக அவளையே தனக்கு தர வேண்டும் என அவன் பேரம் பேசுகிறான். இந்த பேரத்தின் போது அங்கு வருகிறார் மீனா. மகளை விடுத்து தாயிடம் - மீனாவிடம் - பேரம் பேசுகிறான் அவன். ஆத்திரமடையும் மகள் அவனை தாக்க, அவன் இறந்து போகிறான்.
இந்த கொலை குற்றத்திலிருந்து தனது மகள், மனைவியை காப்பாற்றும் பெரும் பொறுப்பு மோகன்லாலுக்கு. அதனை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பது உணர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த கதை.
 
திரையிட்ட அனைத்து இடங்களிலும் த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சென்னையில் 100 நாள்கள் ஓடியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி படம் வெளியாகி இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தின் அனைத்து வசூல் சாதனைகளையும் இந்தப் படம் உடைத்து சாதனை படைத்துள்ளது. 
 
இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இதுவரை த்ரிஷ்யத்தின் திருட்டு டிவிடி வெளியாகாததும் முக்கிய காரணம் (திரையரங்கில் எடுக்கப்பட்ட துல்லியமற்ற டிவிடிகள் மட்டுமே விற்கப்படுகின்றன).
 
த்ரிஷ்யம் இதுவரை 51 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழைப் பொறுத்தவரை இது பெரிய கலெக்ஷன் கிடையாது. ஆனால் படத்தின் பட்ஜெட் வெறும் 4.6 கோடிகள் என்பது முக்கியமானது. அந்தவகையில் பத்து மடங்குக்கு மேல் இந்தப் படம் லாபம் சம்பாதித்து தந்துள்ளது. 
 
ஐம்பது அறுபது கோடிக்கு படம் எடுத்து அறுபது எழுபது கோடி வசூலிப்பதற்கு இது மேல் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.