1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2014 (11:57 IST)

க்ளீனிங் சார்ஜ் 75 லட்சம் - இது சினிமா நூற்றாண்டுவிழா மோசடி

சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டதல்லவா? அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.
தென்னிந்திய சினிமாக்கள் சென்னையை மையங்கொண்டிருந்த காலத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்று பொதுவான பெயரில் சங்கம் அமைத்தது சரி. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி சினிமாவுக்கு தனித்தனி சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களை வேறு மாநில சங்கங்கள் கட்டுப்படுத்த முடியாது. தென்னிந்திய என்று பெயரில் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது.
 
எனில் தமிழ்நாடு நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தகசபை என்று பெயரை மாற்ற வேண்டியதுதானே என்று பலரும் பலகாலமாக சொல்லி வருகிறார்கள். ஒன்றும் நடப்பதாக காணோம்.
 
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவராக கல்யாண் இருக்கிறார். எத்தனை தேர்தல் வந்தாலும் கல்யாண்தான் தலைவர். காரணம் பிராக்சி முறையில் ஒருவரே 150 ஓட்டுகள் போடலாம். கல்யாண் கோஷ்டி 650 பிராக்சிகளை வைத்திருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த பிராக்சிமுறை காரணமாக அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோற்பது நிச்சயம்.
 
இதன் காரணமாக கல்யாணை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜயகுமாரும் அவரது அணியினரும் நாளை நடக்கயிருக்கிற தேர்தலை புறக்கணிக்கயிருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் சினிமா நூற்றாண்டுவிழா நடத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கை சுத்தம் செய்தவகையில் 75 லட்சங்கள் செலவானதாக கணக்கு காண்பித்துள்ளனர். அதேபோல் பிஸ்கட் வாங்கியவகையில் செலவு 20 லட்சங்கள். இந்த அனாவசிய ஆடம்பர விழாவுக்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. வசூலானது 12 கோடிகள். ஆக, 22 கோடிகள். இவ்வளவு பெருந்தொகை இருந்தும் 2.5 நஷ்ட கணக்கு காட்டியுள்ளனர்.
 
கல்யாண் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. இப்போது நூற்றாண்டுவிழா மோசடியும் சேர்ந்துள்ளது. சினிமா சங்கங்கள் தனிமனிதர்களின் அதிகாரத்தின் கீழே செயல்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டை இந்த புகார் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.