வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2014 (13:15 IST)

ஈமு கோழியும், சீனு ராமசாமியும்

கமர்ஷியல் படம் எடுத்தாலும் சமூகப் பொறுப்பிலிருந்து என்னுடைய படங்கள் விலகாது என்று நீர்ப்பறவை வெளியான பிறகு பேட்டியொன்றில் கூறினார் சீனு ராமசாமி. நல்ல படம் என்று நீர்ப்பறவை பாராட்டு பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் படம் சோபிக்கவில்லை. அடுத்தப் படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருந்த நேரம்தான் இந்த ஸ்டேட்மெண்டை விடுத்தார்.
 
அதாவது சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படம் கமர்ஷியல் தூக்கலாக இருந்தாலும் சமூகக் கருத்தை கொண்டதாக இருக்கும். அதற்கேற்ப ஈமு கோழி வளர்த்தால் கோடீவரராகலாம் என்ற மோசடியை இப்படம் மையப்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் இடம் பொருள் ஏவலின் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய் சேதுபதி, விஷ்ணு என்று இரண்டு ஹீரோக்கள். விஜய் சேதுபதிக்கு நந்திதா, விஷ்ணுவுக்கு ஐஸ்வர்யா என்று இரண்டு நாயகிகள். இரண்டு ஹீரோக்களில் ஒருவரின் பூர்வீகம் கொடைக்கானல், இன்னொருவரின் பூர்வீகம் மதுரை திருநகர். இந்த இரண்டு கதைக்களத்தில் படம் பயணிக்கிறது.
 
கொடைக்கானல் ஷெட்யூலை முடித்து தற்போது திருநகர் காட்சிகளை படமாக்கி வருகிறார். திருநகர் சீனு ராமசாமியின் சொந்த ஊர் என்பது முக்கியமானது.
 
படத்தில் வரும் ஈமு கோழி எபிசோடில் விளாச்சேரியைச் சேர்ந்த ஈமு கோழி வியாபாரத்தால் நஷ்டமடைந்த ஒருவரையே நடிக்க வைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல்முறையாக யுவனின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.