1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Last Updated : சனி, 5 மார்ச் 2016 (12:33 IST)

போக்கு காட்டி ஏமாற்றிய விஜயகாந்த்! என்ன செய்யப் போகிறது பாஜக?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


 

 
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணிக்குச் செல்லும், விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார்? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
 
விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வந்து பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்.

தேமுதிகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்று பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
 
ஆனால், விஜயகாந்த் தலையசைப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் பாஜக விடுவதாக இல்லை என்று தொடர்கதையாக சென்று கொண்டிருந்தது.
 
இந்நிலையில், திமுக தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
 
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் தனது கூட்டணி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தனது தொண்டரகளைப் பார்த்து "கிங்காக இருக்கவா, அல்லது கிங் மேக்கராக இருக்கவா?" என்று கேள்வி எழுப்பினார்.
 
அதன் பின்னரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக வீழ்த்த வேண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.


 


உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பலத்தை அதிகரித்து மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கனவுகளுடன் இருக்கும் தேமுதிகவினர் இதற்கெல்லாம் துணைபுரியும் கூட்டணியில் சேருவதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணினர்.
 
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக ஆகியவை பலமான சக்தியாக தற்போதும் இருக்கின்றது என்று சொல்லப்படும் நிலையில், விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் செல்வது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம் பெறும் தேமுதிகவிற்கு 59 இடங்களை ஒதுக்க திமுக தரப்பில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. எனவே, ஏறக்குறைய திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் செல்வது உறுதியாகியுள்ளது.
 
இன்றோ அல்லது நாளையோ விஜயகாந்த தனது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இத்தகு தகவல்களால் பாஜக கலக்கமுற்றுள்ளதாக தெரிகின்றது. பலமான கூட்டணியை அமைப்போம் என்று பாஜக தொடர்ந்து கூறிவந்த நிலையில், அந்த கட்சிக்கு தொடர்ந்து போக்கு காட்டிவந்த விஜயகாந்த் தற்போது  அல்வா கொடுத்துள்ளார். 


 

 
எனவே, பாஜக என்ன செய்யப் போகிறது? எப்படி பலமான கூட்டணியை அமைக்கப் போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
சரத்குமாருடன் சேர்ந்து கூட்டணியை எந்த அளவிற்குப் பலப்படுத்த முடியுமா  என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.
 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவிற்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத நிலையில் தனது செல்வாக்கை அதிகரிக்க, விஜயகாந்துடன் கூட்டணி வைத்து செல்வாக்கைப் பெருக்க நினைத்திருந்த நிலையில் விஜயகாந்த் அல்வா கொடுத்துள்ளார்.

இனி தமிழக பாஜக நிலை என்னவாகும் என்றும், தேர்தலில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கேள்விகள் எழுகின்றன.

இதற்கெல்லாம் பதில் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலைத் தொடர்ந்து, 19 ஆம் தேதியன்று தேர்தல் முடிந்து நடத்தப்படும் வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும்.