வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (17:29 IST)

விஷாலின் பிறந்தநாள் பேட்டி

நேற்று விஷாலின் பிறந்தநாள். அவ்வப்போது செய்து வந்த நற்பணியை நேற்று முழுவீச்சில் முழு நாளும் அரங்கேற்றினார். நடுவே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி. விஷாலின் திட்டங்களை கேட்டால் மனம் திறந்து பாராட்டத் தோன்றுகிறது. இனி விஷால்...
 

 
என்னென்ன நற்பணி திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
 
இலங்கை அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகள் அனைவருடைய கல்விச் செலவையும் நான் ஏற்கிறேன். இதை நான் மட்டும் தனியாக செய்ய முடியாது. எனவே, நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த குழந்தைகள் படிப்பதற்கு ஆகும் முழு செலவையும் வழங்குவேன். 
 
கல்வி உதவி இலங்கையில் அகதிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தானா?
 
அவர்களுக்கு மட்டுமல்ல. ஏழை  எளிய குழந்தைகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என்பது என் லட்சியம்.
 
எதற்காக கல்வி உதவியை தேர்வு செய்தீர்கள்?
 
அனைவரும் படித்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக இந்த உதவிகளை செய்து வருகிறேன். 
 
இதில் அரசியல் உள்ளதா?
 
அரசியல் காரணங்களுக்காக இது போன்ற உதவிகளை செய்யவில்லை. அரசியலுக்கு வரும் எண்ணமும் இப்போது இல்லை. ஏற்கனவே ஏழை எளியவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். சமீப காலமாக அது வெளியே தெரிகிறது. 
 
வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா?
 
நான் பிற்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்பதை இப்போதே கூற முடியாது. நான் அரசியலில் யாரைக் கண்டும் பயப்படவில்லை. பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. 
 
 

நடிகர்கள் தனித்தனியாக உதவி செய்வதைவிட கூட்டாக செய்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே?
 
அது உண்மைதான். நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அனைவரும் ஒரே அமைப்பை உருவாக்கி உதவி செய்யலாம் என்கிற உங்கள் ஆலோசனை பற்றி பிற்காலத்தில் முடிவு செய்யலாம். 
 

 
நடிகர் சங்கத் தேர்தலில் உங்கள் அணி போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுவிட்டதா?
 
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுகிறார்கள்? நீங்களா?
 
தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. நாசர் போட்டியிடுகிறார். 
 
திருமணம் எப்போது? இந்த வருடம் எதிர்பார்க்கலாமா?
 
எனக்கு இந்த ஆண்டு திருமணமா இன்னும் 2 ஆண்டுகள் கழித்து திருமணமா என்பது எனக்குத் தெரியாது. திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. 
 
நீங்கள் இப்படி நற்பணிகள் செய்ய என்ன காரணம்?
 
என்னை ஒரு நல்ல நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால், என் வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.