வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (11:43 IST)

கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அதிகப் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பொதுவாக அதிகம் பேசாதவர். பேசினால் அதில் உணர்ச்சியின் சதவீதம் அதிகமாக இருக்கும். 35 வருடங்களுக்கு முன் எஸ்.பி.பி. தனது மயக்கும் குரலில் பாடிய சங்கராபரணம் படம் மீண்டும் வெளியாகிறது. இந்தமுறை தமிழில். படம் குறித்த அவரது பேச்சில் உணர்ச்சி துலங்கியது.

கடவுள் கொடுத்த வரம்...

1979 -இல் சங்கராபரணம் பாடல்களை விஜயா கார்டனில் பதிவு செய்த போது என்னுடைய வயது 33. இப்போது வயது 68. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு அதே பாடல்களை தமிழில் பாடியிருக்கிறேன். இந்த வயதிலும் என்னுடைய குரல் அப்படியே இருக்கிறது என்றால் அதை கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறேன்.

தற்கொலை செய்திருப்பேன்...

சங்கராபரணத்தை இயக்கிய கே.விஸ்வநாத் என்னுடைய பெரியப்பா மகன்தான். இந்தப் படத்தை எடுப்பது தொடர்பாக அவர் என்னுடைய அப்பாவிடம் பேசியிருக்கிறார். உடனே அவர் என்னை வைத்து பாட வை என்றார். நான் சொன்னால் அவன் கேட்பானா என்று விஸ்வநாத் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, கேட்கவில்லை என்றால் மூஞ்சியில் குத்தி பாட வை. சங்கராபரணம் பாடலை பாட அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்திதான் எனக்கு பயிற்சி தந்து பாட வைத்தார். பேப்பரில் இருக்கும் வரிகளை எண்ணிப் பாடாமல் ஆழ்மனதிலிருந்து பாடு என்று அவர்தான் எனக்கு அறிவுறுத்தினார். யாராவது சங்கராபரணம் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.

கண் கலங்கிய ரசிகர்கள்...

சங்கராபரணம் வெளிவந்தவுடன் நான் பார்க்கவில்லை. படம் பார்த்த ரசிகர்கள் கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கிச் சென்றதை பார்த்திருக்கிறேன். மூன்று நாள்கள் கழித்தே நண்பர்களுடன் சங்கராபரணத்தைப் பார்த்தேன். படம் ஆரம்பித்ததிலிருந்து முடிந்ததுவரை எல்லாமே கடவுளின் அனுக்கிரகம்தான். பாட்டு பாட நான் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை. கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன்.

நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன்...

இந்தப் படத்தின் ஹீரோ சோமயாஜுலு ஆந்திராவில் ஒரு மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்தார். அவரை நான்தான் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்தைப் பற்றி பேசினால் நிறைய நினைவுகள் வருகிறது. முக்கியமாக இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட லதா மங்கேஷ்கர், உடனே படத்தைப் பார்க்க வேண்டும் என்று சிவாஜிக்கு தகவல் சொல்லி மும்பையிலிருந்து சென்னை வந்து படத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

நான்கு ஜாம்பவான்கள்....

இந்தப் படத்தில் நான்கு ஜாம்பவான்கள் உள்ளனர். ஒருவர் தயாரிப்பாளர். அடுத்து படத்தை இயக்கிய விஸ்வநாத். ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா. படத்துக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன்.

வணக்கம் பாலு...

சங்கராபரணம் எனக்கு மரியாதை பெற்றுத் தந்த படம். அதுவரை பாலு என்று என்னை அழைத்தவர்கள் படம் வெளியான பிறகு வணக்கம் பாலு என்று அழைக்கத் தொடங்கினார்கள். வெட்டு, குத்து எல்லாம் இல்லாத அமைதியான படம் இது. மனதுக்கு அமைதியை தந்த படம்.