1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (15:52 IST)

வெற்றி கிடைத்த உடனே மாறிட்டாரு - சிம்புவை சாடிய எஸ்.ஏ.சந்திரசேகர்!

சிம்பு ஏன் கலந்துகொள்ளவில்லை - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி?
 
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
 
இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
 
இந்த படத்தை முதல் முறை மொத்தமாக ரசித்து பார்த்தேன் என்றால் இரண்டாவது முறை பார்க்கும்போது பின்னணி இசை என்னை மிரட்டி விட்டது. அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவை ‘இசைஞானி இளையராஜாவின் 2K வெர்ஷன்’ என்றுதான் நான் சொல்வேன்..  
 
சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.. இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.  அவர் ஏதோ படப்பிடிப்பில்  இருக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும்.. வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது” என்று பேசினார்.