வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (12:38 IST)

நான் சாதாரணமானவள் - ஸ்ருதி பேட்டி

மகேஷ் பாபு, ஸ்ருதி நடித்துள்ள ஸ்ரீமந்துடு வரும் 7- ஆம் தேதி வெளியாகிறது. இதேபடம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் வெளியாக உள்ளது. புதிய படம் வெளியாவதையொட்டி ஸ்ருதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
செல்வந்தன் படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம்?
 
இதில் கல்லூரி மாணவியாக வருகிறேன். மென்மையான அதேநேரம் சுதந்திர சிந்தனை கொண்டவள். சம்பிரதாயமாக இருந்து கொண்டே புதுமையான முறையில் யோசிக்கும் கதாபாத்திரம். 
 
நிஜத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்?
 
ரொம்ப சாதாரணமானவள். வீட்டிற்கு சென்றதும் எல்லா பெண்களையும் போல கலகலவென பேசுவேன். சந்தோஷம் வந்தால் சிரிப்பேன். கஷ்டம் வந்தால் வேதனைப்படுவேன்.
 
படத்துக்குப் படம் உங்கள் அழகு அதிகரிக்கிறதே?
 
அழகுக்காக நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை. வயதோடு சேர்ந்துவரும் மெச்சூரிட்டிகூட அழகை அதிகரிக்கும்.
 
அழகாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்குமா?
 
அப்படியெல்லாம் எதுவுமில்லை. நமக்குள் நாம் உறுதியாக இல்லையென்றால் வெளியே எவ்வளவு மேக்கப் போட்டாலும் பலனில்லை. நம்மீது நமக்கு நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருந்தால் அழகாக இல்லாவிட்டாலும் அழகாகவே தெரிவோம். 

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
 
நான் எந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தாலும், அதற்கு முன் நான் நடித்த கதாபாத்திரங்களின் சாயல் இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்பேன். ஒரேவிதமான பாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு சலித்துவிடும்.
உங்கள் தங்கை அக்ஷராவும் இப்போது நடிகை. அவருக்கு ஏதாவது ஆலோசனை கூறுவீர்களா?
 
என் அப்பா, அம்மா எனக்கு எந்த ஆலோசனைகளையும் வழங்கியதில்லை. இது உன் வாழ்க்கை. உன் விருப்பம். புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். எப்போதாவது தேவை ஏற்பட்டால் ஆலோசனை வழங்குவார்கள். என் தங்கைக்கு நானும் அப்படித்தான்.
 
உங்கள் சொந்த ஊர் குறித்து...?
 
பிறந்து வளர்ந்த சென்னைதான் சொந்த ஊர். அம்மா மும்பை என்பதால் அதுவும் சொந்த ஊரானது. தெலுங்கில் அதிக படம் பண்ணுவதால் தற்போது ஐதராபாத்தும் சொந்த ஊரானது.