வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2017 (17:24 IST)

கேரளா முதல்வரின் செயலை என்னால் நம்ப முடியவில்லை - நடிகர் சூர்யா பேட்டி

எஸ் 3 படம் வரும் 26 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு படத்தை விளம்பரம் செய்ய இயக்குனர் ஹரியுடன் கேரளா சென்றிருந்தார் சூர்யா. கொச்சியிலிருந்து அவர் விமானம் மூலம் திருவணந்தபுரம் வந்த போது அவருடன் கேரளா முதல்வர் பினராய் விஜயனும் பயணித்திருக்கிறார். திருவனந்தபுரம் வந்த சூர்யா அது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

 
பினராய் விஜயனை சந்தித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
திருவனந்தபுரத்திற்கு நான் விமானத்தில் வந்த போது கேரள முதல்மந்திரி பினராய் விஜயனை சந்தித்தது என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. அவர் மிக எளிமையாக, சாதாரண வகுப்பில் பயணம் செய்ததையும், மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கும் வரை காத்திருந்து கடைசியாக இறங்கியதையும் என்னால் நம்ப முடியவில்லை. கேரள முதல்வரின் இந்த எளிமையை தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாது.
 
கேரள அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த பினராய் விஜயனும், எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றாக வந்து சென்றது கேரள மக்களின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது.
 
கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
 
கேரளாவில் தமிழ் படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் வெளியிடப்படுகிறது. கேரள ரசிகர்களும் அதை ரசித்து பார்க்கிறார்கள். தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் கொடுக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.
 
ஜல்லிக்கட்டுக்கு தடை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதே?
 
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்வில் ஒரு மாணவர் காப்பி அடித்தார் என்பதற்காக தேர்வு முறையையே ரத்து செய்வது போல இது உள்ளது.
 
இந்தப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் எழுச்சி மிக்கதாக உள்ளது. அவர்கள் தாமாகவே வந்து போராட்டம் நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த போராட்டத்தில் உண்மை உள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது பற்றி...?
 
ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.