1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (12:31 IST)

நானேதான் எனக்கு போட்டி - யுவன் பேட்டி

யுவன் ஷங்கர் ராஜாவை ரசிகர்கள் ரொம்பவே தவறவிடுகிறார்கள். சமீபத்தில் யுவன் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. சமீபமாக அதிக படங்களும் அவருக்கு இல்லை.


 
 
இந்நிலையில், மதுரையில் நடக்கப் போகும் தனது இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு யுவன் பதிலளித்தார்.
 
உங்க இசை நிகழ்ச்சி பற்றி சொல்லுங்க...?
 
வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சி மலேசியா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை மதுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
 
இசை நிகழ்ச்சி என்று நடக்கிறது?
 
வருகிற ஜனவரி மாதம் 26–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். இசை நிகழ்ச்சியை நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
 
உங்க அப்பாவின் சாதனையின் அருகில் வந்துவிட்டீர்களா?
 
என்னையும் என் அப்பா இளையராஜாவையும் ஒருதுளி கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன். நான் இப்போது தான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
இப்போது என்ன படத்துக்கு இசையமைக்கிறீர்கள்?
 
தருமி என்ற புதிய படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன்.
 
ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து தேவி ஸ்ரீபிரசாத்தும் நடிக்கப் போகிறார். உங்களுக்கு அந்த ஆசை இல்லையா?
 
படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை வந்ததில்லை. ஆனால் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக தயாரிப்பில் ஈடுபடுவேன்.
 
இசைத்துறையில் வெற்றி பெற்ற நீங்கள் யாரை போட்டியாக கருதுகிறீர்கள்?
 
என் வாழ்வில் முழுமையான வெற்றி கிடைத்துவிட்டதாக நான் இதுவரை நினைக்கவில்லை. வெற்றிக்காக தினம் தினம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு போட்டியாக நான் என்னை தான் நினைக்கிறேன்.
 
புதிதாக வரும் இளம் இசையமைப்பாளர்கள்...?
 
இளம் இசை அமைப்பாளர்கள் அதிக அளவில் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் போட்டி அல்ல. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நல்ல நண்பனாக தான் நான் இருப்பேன்... இருக்கிறேன்.
 
இசை வரிகளை மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
 
என் இசையில் வரிகளின் அர்த்தம் கேட்பது போல இசை அமைக்கிறேன். இயக்குனர்கள் வேண்டுகோளுக்கிணங்க இசை அமைக்க வேண்டியுள்ளது.