1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 12 நவம்பர் 2016 (17:22 IST)

ரஜினி, கமல் ரசிகர்களின் மோதல்தான் எங்கிட்ட மோதாதே - நடிகர் நட்டி பேட்டி

இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் ராமுசெல்லப்பா இயக்கியுள்ள படம் எங்கிட்ட மோதாதே. இதில் நட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் சஞ்சிதா ஷெட்டி, பாலாஜி, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து நட்டி சொன்ன தகவல்கள் சுவாரஸியமானவை.


 

எங்கிட்ட மோதாதே பற்றி சொல்லுங்க...?

இந்தப் படம் 1986 -87 இல் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பின்னணியில் இந்தப் படத்தை எடுத்தோம்.

ஏன் அந்த காலகட்டம்...?

அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பொழுது போக்கு சினிமா தான். ரஜினி, கமல் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்ட நேரம் அது. இந்த மோதலின் பின்னணியில்தான் கதை நடக்கிறது.

கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

நான் ரஜினி ரசிகராக நடித்து இருக்கிறேன். பாலாஜி கமல் ரசிகராக வருகிறார். இரண்டு பேருக்கும் கட்அவுட் வரைவது விளம்பரங்கள் எழுதுவது தொழில். அதற்கு பின்னால் எவ்வளவு அரசியல் இருந்தது, அந்த கால ரசிகர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும், நட்பு தான் எல்லாவற்றையும் விட மேலானது என்பதையும் சொல்லி இருக்கிறோம்.

அந்த காலகட்டத்தை உருவாக்குவது சிரமமாக இருந்திருக்குமே?

இன்று செல்போன் யுகம். இந்த படத்தில் 1986 ஆம் ஆண்டு காலகட்டத்தை கொண்டுவர ரொம்பவும் கஷ்டப்பட்டோம்.

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸிய சம்பவம்...?

1987 கதை என்பதால் எம்.ஜி.ஆர். மறைவை பதிவு செய்வது போன்ற காட்சிகளை எடுத்தோம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு என்பதை அறியாமல் எம்.ஜி.ஆர். படத்தை பயபக்தியுடன் வணங்கினார்கள். இதைப்பார்த்து மெய் சிலிர்த்துப் போனோம்.