வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 12 மார்ச் 2015 (11:45 IST)

சென்சார் போர்டில் படம் பார்க்கிற போதே சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் உட்கார்கிறார்கள் - சென்சார் போர்டை விளாசும் திலகர் பட இயக்குனர்

மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் கதையை ரத்தமும் சதையுமாக உருவாகியிருக்கும் படம் திலகர். இப்படத்தை பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளார்.  இப்படத்தை கலைப்புலி இண்டர் நேஷனல் வெளியிடுகிறது என்றதும் படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
 
படம்பற்றிய அனுபவங்களை இயக்குநர் பெருமாள்பிள்ளை இங்கே பேசுகிறார்.
திலகர் எதைப் பற்றிய படம்?
 
இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.
இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.
 
புதுமுகங்களை வைத்து இயக்கியது ஏன்?
 
இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தப் பாத்திரம் தெரியாது. எனவே நிறையபேரை புதுமுகங்களையே வைத்து எடுத்தேன். அறிமுகம் துருவா நாயகன் .பிரபல நடிகர் என்றால் கிஷோர் இருக்கிறார். 
 
பிற நடிகர்கள்? 
 
'பூ' ராமு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்து அவருடன் வேலை பார்த்தவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை. கதாநாயகி இரண்டு பேர். ஒருவர்  மிருதுளா பாஸ்கர். இவர் வல்லினம் நாயகி. இன்னொருவர் அனுமோல் .  
 
படப்பிடிப்பிடங்கள்?
 
இது நெல்லை மண் சார்ந்த கதை. எனவே அந்தப் பகுதியில்தான் எடுத்தோம். குலசேகரப்பட்டினம், பத்தமடை, சேரன்மாதேவி, தென்காசி, அம்பாசமுத்திரம், களக்காடு என்று நெல்லையில் உள்ள ஊர்களில்தான் படமாக்கியுள்ளோம்.
 
படத்துக்கு சென்சார் போர்ட் ஏ சான்றிதழ் தந்துள்ளதே...?
 
இவர்கள் யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது. வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட பருத்திவீரன் படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
நிறைய படங்கள்  ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம்  யூ சான்றிதழ்  கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட ஏ இல்லை. இதற்கு மட்டும்  பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.
 
தெருவெங்கும். சிக்கன்  கடைகள், மட்டன்  கடைகள் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கோழிகள், ஆடுகள் வெட்டிக் கொல்லப் படுகின்றன.
 
ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. காட்டினால் துன்புறுத்தப் படுகிறதாம். ஏன்.. சென்சார் போர்டில் படம் பார்க்கிற போதே சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் வந்து உட்கார்கிறார்கள்.
 
வந்து உட்கார்ந்ததும் ஆடு கோழி காட்சி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால் படங்களில் ஆடு கோழி காட்டக் கூடாது. வந்தால் விலங்குகள் துன்புறுத்தப்படுகிறதாம். ஏனிந்த முரண்பாடு?
 
நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நம் தணிக்கை துறை இந்திய அரசின் தணிக்கை துறைதான். மத்திய அரசின் தணிக்கை துறைதான். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. வெவ்வேறு பார்வை உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள தணிக்கைத் துறை அல்ல. கேரளாவில், ஆந்திரவில், கர்நாடகத்தில் அனுமதிப்பதை இங்கு விடுவதில்லை. இங்கே கூட ஒருவர் எடுக்கும் படத்தில் உள்ளதை  விடுவார்கள். மற்றொருவர் படத்தில் வெட்டுவார்கள்.
 
நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று  தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று  புரிவதில்லை.
 
ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரியவில்லை. யதார்த்தமும்  தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.
 
ஒரு படத்துக்கு  யூ சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு  ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம்.