வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (09:32 IST)

சண்டி வீரன் - சற்குணம், அதர்வா, ஆனந்தி பேட்டி

பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது சண்டி வீரன். படம் முடியும் முன்பே நல்ல லாபத்துக்கு விலை போனது. அதர்வாவுக்கு இது வெற்றி பெற்றேயாக வேண்டிய படம். கயல் ஆனந்தி நாயகி. படம் ஆகஸ்ட் 7 வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. 
இயக்குனர் சற்குணம்
 
சண்டி வீரன் என்ன மாதிரியான படம்?
 
அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக இதனை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய களவாணி, வாகைச்சூடவா படங்களின் வரிசையில் சண்டி வீரனும் இருக்கும்.
 
பாலா படத்தை தயாரித்தது எப்படி?
 
முதலில் நான் பாலாவிடம் சண்டி வீரன் கதையைச் சொன்னேன். கதையை கேட்டுவிட்டு, நல்லாயிருக்கு என்றார். பிறகு படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார்.
 
அதர்வாவை யார் தேர்வு செய்தது. நீங்களா பாலாவா?
 
கதையை சொன்ன பிறகு, நாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என பாலாவிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.
 
படத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருக்கிறாரே?
 
வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டக்கோழி படத்துக்குப் பிறகு அவருக்கு பெயர் சொல்கிற படமாக இது இருக்கும்.
 
ஆனந்தியை தேர்வு செய்தது எப்படி?
 
கயல் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து அவரை தேர்வு செய்தேன்.
 
நாயகன் அதர்வா
 
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
 
எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து, உடனே பார்க்க வேண்டும் என்றார். நான் உடனே சென்று அவரை சந்தித்தேன். ஒரு கதை கேட்டேன், அதில் நீ நடிக்கணும் என்றார். சரி என்றேன்.
 
கதை கேட்காமலா?
 
அவர் நடிக்க வேண்டும் என்றதும் கதை கேட்காமலே சரி என்றேன். அதன் பிறகுதான் சற்குணம் படத்தை இயக்கப் போகிறார் என்பது தெரியும்.
 
படத்தில் உங்களின் வேடம்...?
 
இதில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன்.  கிராமியப் பின்னணியில் நல்ல கமர்ஷியல் படமாக இது உருவாகியிருக்கிறது.
 
சற்குணத்தின் இயக்கத்தில் நடித்தது எப்படியிருந்தது?
 
களவாணி படத்தைப் பார்த்து, சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
 
நாயகி ஆனந்தி
 
படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?
 
நான் இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது.