வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. நட்சத்திர பேட்டி
Written By John
Last Updated : செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (13:06 IST)

காமெடிப் படமும் கஷ்டப்பட்டுதான் எடுப்போம் - ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

கண்டபடி கலெக்ஷனை அள்ளிக் குவிக்கிறது மான் கராத்தே. அந்த மகிழ்ச்சியோடு பத்திரிகையாளர்களை சந்தித்தது மான் கராத்தே படக்குழு. படத்தின் கதை எழுதி தயாரிப்பிலும் பங்கு பெற்ற முருகதாஸுக்கு இது ஸ்வீட் எடு கொண்டாடு நேரம். இஷ்டப்பட்டு செய்தாலும் கஷ்டம் கஷ்டம்தானே. காமெடிப் படம் என்று கொஞ்சம் அலட்சியமாக பேசுகிறவர்களுக்கு பதிலளித்தபடி தொடங்கியது அவரின் பேச்சு.
காமெடிப் படமும் கஷ்டப்பட்டுதான் எடுப்போம். அதை தயவு செஞ்சி புரிஞ்சுக்கணும். எப்படி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கஷ்டப்படுறோமோ அதே கஷ்டம்தான் காமெடிப் படத்துக்கும். ஹ்யூமர் படம்னா அதை ஜாலியா எடுப்பாங்கன்னு இல்லை. அதுவும் ரொம்ப கஷ்டம்தான். ஆக்ஷன் படத்தில் பில்டப் விட்டுப் போச்சின்னா லோ ஆங்கிள்ல ஒரு ட்ராக் போட்டு மியூஸிக்ல அதை தூக்கிர முடியும். காமெடிங்கிறது அந்த ஸ்பாட்ல வொர்க் அவுட் ஆகிற விஷயம். டைமிங் ரொம்ப முக்கியம்.
 
படத்தின் ரிசல்ட் திருப்தியாக இருக்கிறதா?
 
இன்னைக்குகூட இங்க வர்றதுக்கு முன்னாடி தியேட்டர்ல பார்த்துகிட்டுதான் வர்றேன், அவ்வளவு கூட்டம் இருந்துச்சி. தியேட்டர்ல எல்லா வயசு ஆடியன்சும் ரசிச்சு பார்க்கிறாங்க. மன நிறைவா இருந்திச்சி. ஒரு படம்ங்கிறது அல்டிமேட்டா ஆடியன்ஸ்கிட்ட கொண்டு சேர்க்கிறது, எவ்வளவு தூரம் ஆடியன்ஸ்கிட்ட ரீச் பண்ணுச்சிங்கிறது. அந்தவகையில் ரொம்ப திருப்தியா இருக்கு.
 
 

சிரிப்பு இருக்கு சீரியஸ் இல்லையே?
 
சிவ கார்த்திகேயனை வச்சுகிட்டு ரொம்பவும் சீரியஸா ஒரு படம் பண்ண முடியாது. பதினாலு ரீலுக்கும் ஒரு கருத்துன்னு போனா அது ரிவர்ஸாயிடும். அவர் இதுவரை பண்ணியிருக்கிற படங்களிலிருந்து அடுத்த ஸ்டெப்... அதுதான் முடியும். நாலு ஸ்டெப் தாண்டுனா அது வேறமாதிரி ஆயிடும்.  
வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்குப் பிறகுதான் சிவ கார்த்திகேயனை கமிட் செய்தீர்களா?
 
இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயனை கமிட் பண்ணும் போது இரண்டு படம்தான் வெளியாகியிருந்தது. ஒன் இயர்ல பார்த்தீங்கன்னா தொடர்ந்து மூணு ஹிட் கொடுத்திட்டாரு. அது ரொம்ப சேலஞ்சிங்காயிடுச்சி... ரொம்ப பயமா ஆயிடுச்சி. வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு ஒரு படம் அவ்வளவு பெரிய ஹிட்டாயிடுச்சி. அதுவும் என்னோட அசிஸ்டெண்ட் திருக்குமரன், அவருக்கு ஒரு நல்லது பண்ணணும்ங்கிறதுதான் இந்த படம் ஆரம்பிச்சதுக்கு முதல் காரணம்.
 

தொடர்நது ஏன் தயாரிப்பு? பணத்துக்காகவா?
 
பணம்ங்கிறது வேற. அதுக்கு எனக்கு டைரக்ஷன் இருக்கு. ஆனா புரொடக்ஷன்னு வரும்போது நல்ல திறமைசாலிகள், புது டெக்னிஷியன்கள், ஆக்டர்ஸை உள்ளே கொண்டு வரணும்ங்கிறதுதான் என்னோட நிறுவனத்தின் ஒரே குறிக்கோள். பணம் இரண்டாவதுகூட கிடையாது மூணாவது நாலாவதுகூட இல்லை. பணமே இல்லைன்னாகூட நான் படமெடுப்பேன், நல்ல திறமைசாலிகளை ஊக்குவிப்பேன்.
சிவ கார்த்திகேயனின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க?
 
சிவ கார்த்திகேயன் படிப்படியா வளரும் போது எனக்கு அவதார் படத்துல வர்ற அந்த ஆள்தான் நினைவு வரும். வெளியே இருந்து வந்து அந்த பறவைகூட போராடி அதன் மேலே ஏறி அமர்ந்து...  அதுதான் நினைவு வரும். சிவ கார்த்திகேயனும் அதுமாதிரி மீடியாவிலிருந்து வந்து போராடி சீக்கிரமே அவரும், அந்த பறவையை அடக்கின மாதிரி ஸ்டெடி ஆவார்.

சிவ கார்த்திகேயன் தடால்னு ஒரு கருத்துப் படத்தில் நடிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் அந்த இடத்துக்கு வரணும். அவரை ஆடியன்ஸ் பார்க்கணும்னு விரும்புற ஒரு கோணம் இருக்கு. ஆடியன்ஸ் அவங்கள்ல ஒரு ஆளா அவரை பார்க்கணும்னு நினைக்கிறாங்க. ஸோ, அதுல இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமா வரணும். 
 

 இந்தப் படத்தில் ஏதாவது கருத்து இருக்கிறதா?
 
மான் கராத்தேங்கிறதுல உத்துப் பார்த்தீங்கன்னா மிகப்பெரிய விஷயம் சொல்லப்பட்டிருக்கும். லைஃப்ல யார் ஜெயிக்கணும்? ஏழு வயசிலயிருந்தே அப்பா, அம்மா கைடென்ஸ்ல வளர்ந்த ஒருவன் ஜெயிக்கணுமா? இல்ல, எனக்கு சரியான கைடென்ஸ் இல்ல நான் ஊதாரியா போயிட்டேன்... வீணா போயிட்டேன்... அப்படிப்பட்டவனுக்கு இருபத்தைஞ்சி முப்பது வயசுல ஒரு ஸ்பார்க் அடிக்குது. லைஃப்ல நாமும் ஜெயிக்கணும்னு முடிவு பண்ணுறான். அவங்க ரெண்டு பேரும் மோதுறாங்க. சின்ன வயசுலேயே ரிங்ல வளர்ந்த ஒருத்தன் ஜெயிக்கணுமா, இருபத்தைஞ்சு வயசுல ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறவன் ஜெயிக்கணுமா. இதுதான் அந்தப் படத்துல முக்கியமான விஷயம். மெஜாரிட்டியான ஜனங்க இந்தப் படத்தோட தங்களை கனெக்ட் பண்ணிகிட்டதும் அதனாலதான்.
அனிருத்...?
 
ஆல் சாங்ஸ் ஹிட். சாங்ஸோட லீடுக்கே கைத்தட்டுறாங்க. அதுக்கு காரணம் அனிருத்தோட மியூஸிக். பேக் ரவுண்ட் ஸ்கோரும் நல்லா பண்ணியிருந்தார். யங்ஸ்டர்ஸ் சாங்ஸ்ல ஹிட் கொடுக்கிறது பெரிய விஷயமில்லை. ஆனா பேக்ரவுண்ட் ஸ்கோர்ல அந்த சீனை கன்வே பண்றது கஷ்டமான விஷயம். அது அனிருத்துக்கு கைவந்திடுச்சி.