வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (15:12 IST)

அஜித் படம் செவ்வாய்கிழமை வெளியானாலும் நான் தியேட்டரில் சென்று பார்ப்பேன் - பார்த்திபன் பேட்டி

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை பார்த்திபன் சந்தித்தார். வழக்கமான கலகல பேச்சு இந்த சந்திப்பை சுவாரஸியமாக்கியது.


 
 
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் சாந்தனுவை ஹீரோவாக்க என்ன காரணம்?
 
இந்த படத்தில் சாந்தனுவை கதாநாயகனாக ஆக்குவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. நான் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சாந்தனுவை அழைத்திருந்தேன். அப்போது, அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்க வந்த ராகவா லாரன்ஸ், சாந்தனுவின் நடனம் மற்றும் அவருடைய ஸ்டைல் எல்லாம் பார்த்து அவரை வைத்து ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்.
 
அதுதான் அவரை நாயகனாக்க காரணமா?
 
அது மட்டுமில்லை. என்னுடைய குரு பாக்யராஜ் சாருக்காக எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை சாந்தனுவுக்கு செய்தால், அவர் மூலமாக பாக்யராஜ் சாரை சென்றடையும் என்பதாலும் தான் இந்த படத்துக்கு சாந்தனுவை கதாநாயகனாக தேர்வு செய்தேன்.
 
5,00 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்களே?
 
எனக்கு சினிமாவைத் தவிர வேற பொழப்பு தெரியாது. அது 500, 1000 செல்லாமல் போனாலும் சரி, நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்குத் தெரிந்தது சினிமா மட்டும் தான். 
 
இந்தப் படத்தை கிரவுட் பண்டிங் மூலமாக எடுத்ததாக சொல்லப்படுகிறதே?
 
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை நான் கிரவுட் ஃபண்டிங் மூலமாக உருவாக்கி இருக்கிறேன். இதன் மூலம் பத்து பேர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இது ஒரு ஆரோக்கியமான விஷயம் என நினைக்கிறேன். 
 
இந்த முடிவுக்கு என்ன காரணம்?
 
நிறைய தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி செய்யலாம், அந்த மாதிரி செய்யலாம் என வருவார்கள். காசோலை கொடுப்பார்கள். நானும் எதாவது ஒன்றிலாவது தப்பித்தவறி பணம் வந்துவிடும் என பார்ப்பேன். ஆனால் எல்லாம் காசோலையுமே பணமின்றி திரும்பிவிடும். அதனால் தான் இந்த க்ரவுடு ஃபண்டிங் முறையைத் தேர்வு செய்தேன். 
 
படம் எப்போது ரிலீஸ்?
 
டிசம்பர் 23
 
பண்டிகை நாள்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகுமே...?
 
பெரிய நடிர்கர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை. அவர்களின் படங்கள் எந்த நாட்களில் வெளியானாலும் ரசிகர்கள் சென்று தியேட்டரில் பார்ப்பார்கள். அஜித் படம் செவ்வாய் கிழமையில் ரிலீஸ் ஆனாலும் நான் தியேட்டரில் சென்று பார்ப்பேன்.
 
தொடர்ந்து படங்கள் நடிக்கையில் திடீரென்று படம் இயக்குவது ஏன்...?
 
நான் இப்போது சில படங்களில் நடிக்கிறேன், நல்ல சம்பளம் வருகிறது. ஆனால் படம் இயக்கும் ஆசை மட்டும் போகவில்லை. சொகுசாக வாழ்வதற்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே ஒரு கடினமான பாதைதான் உங்களை அழகான இடத்துக்கு கொண்டு சேர்க்கும். 
 
படம் எப்படி வந்திருக்கிறது?
 
நன்றாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.