வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:10 IST)

திருட்டு டிவிடியை ஒழிக்க என் உயிரையும் கொடுக்க தயார் - விஷால்

திருட்டு டிவிடி குறித்த விழிப்புணர்வு திரையுலகுக்குள் தீவிரப்பட ஆரம்பித்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் விஷால். காரைக்குடியில் இவர் நடத்திய அதிரடி வேட்டைக்குப் பிறகு பார்த்திபன் திருட்டு டிவிடி விற்ற இருவரை போலீஸில் பிடித்துத் தந்தார்.

திருட்டு டிவிடி என்றாலே முஷ்டி மடக்கும் விஷால், அரசியல் பிரவேசத்துக்கான வழியாக இதனை கருதுகிறாரா? கேள்விகள் ஆயிரம். பதில் சொல்ல விஷாலும் தயார். பிறந்தநாளை முன்னிட்டு அவர் சொன்ன வாண வேடிக்கை பதில்கள் உங்களுக்காக.
 
திருட்டு டிவிடி ஒழிப்பதில் முதல் ஆளாக நிற்கிறீர்களே...?
 
திருட்டு டிவிடியை ஒழிப்பதில் எப்போதும் முதல் ஆளாக நிற்பேன். எந்த பெரிய தாதாவாக இருந்தாலும் பயப்பட மாட்டேன். திருட்டு டிவிடி என் படுக்கையறைக்குள் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக என் உயிரையும் கொடுக்க தயார்.
 

தனி ஆளாக திருட்டு டிவிடியை ஒழிக்க முடியுமா?
 
இந்தப் பிரச்சனைக்காக ரஜினிகாந்த், விஜய் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளும் இறங்க வேண்டும். திருட்டு டிவிடியை ஒழிக்க ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் திரையுலகின் அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்தால், திருட்டு டிவிடியை ஒரே மாதத்தில் ஒழித்து விடலாம்.
திருட்டு டிவிடி இந்த அளவு வளர்ந்ததற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
தப்பு திரையுலகினர் மீதுதான். டிவிடி திருடர்களை வளர்த்து விட்டுவிட்டோம். அது தப்பு என்று மற்றவர்களுக்கு புரிய வைக்காதது எங்கள் தவறுதான். சினிமாவில் மட்டும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இல்லாமல், நிஜத்திலும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இருக்க விரும்புகிறேன். காரைக்குடியில் திருட்டு டிவிடி விற்றவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தது ஒரு தொடக்கம்தான்.
 

இதெல்லாம் அரசியலில் நுழைவதற்கான முஸ்தீபுகளா?
 
என் கையில் காசு இல்லாதபோதே நல்ல விஷயங்கள் செய்து கொண்டிருந்தேன். இப்போது காசு இருக்கிறது. இன்னும் நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். அரசியலுக்கு வந்துதான் இதெல்லாம் செய்ய வேண்டும் என்றில்லை. அரசியலுக்கு வராமலும் செய்யலாம். 
அரசியல் என்றால் அலர்ஜியா?
 
எனக்கு அரசியல் தெரியாது, அதுதான் காரணம். அரசியலுக்கு வருவது என்றால் நான் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியல் படிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை, எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதுமில்லை.
 

நடிகர் சங்கத்துடன் உங்களுக்கு என்னதான் பிரச்சனை?
 
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவருக்கும் நான் எதிரானவனில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் நாடகங்களில் நடித்து கட்டியது நடிகர் சங்கம். அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். இதுதான் என்னுடைய ஆசையும் ஜீவா, ஆர்யா போன்றவர்களின் ஆசையும்.
இலவசமாக படம் நடிக்கும் திட்டம்...?
 
நடிகர் சங்க கட்டடத்துக்காக இலவசமாக ஒரு படத்தில் நடிக்க நான், ஆர்யா, ஜீவா, கார்த்தி தயாராக இருக்கிறோம். நலிந்த தயாரிப்பாளர், நலிந்த விநியோகஸ்தர்கள் இருப்பது போல் நலிந்த நடிகர் ஒருவர்கூட இருக்கக் கூடாது.