1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:10 IST)

அழகை மீறி எனது நடிப்பிற்காகவும் நிறைய படங்கள் கிடைக்கும் - சித்தார்த் பேட்டி

கன்னடத்தில் கிரவுட் பண்ட் முறையில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், லூசியா. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் வாங்கி தமிழில் தயாரித்துள்ளார். நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார். இது அவரது 25 -வது படம். படம் குறித்த சித்தார்த்தின் பேட்டி.
எனக்குள் ஒருவன் படத்தின் கதை மற்றும் காட்சிகள் லூசியாவிலிருந்து மாறுபட்டது என்று கேள்விப்பட்டோம்?
 
லூசியா கதையில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என எண்ணினோம். அதனால், அந்த கதையை அப்படியே மாற்றி அமைத்து, டயலாக் எல்லாம் புதுமையாக கொடுத்துள்ளார் இயக்குனர். 
 
அந்தக் கதையே புதுமையானதுதானே. பிறகு ஏன் மறுபடியும் மாற்றம்?
 
இது கன்னடத்தில் ஒரு புதுமுக ஹீரோ நடித்து வெற்றி பெற்ற படம். அவர் அங்கு இரட்டை வேடத்தில் நடிப்பது புதிது என்பதால் அவரது நடிப்பை அனைவரும் ரசித்தனர். ஆனால், நான் பல படங்களில் நடித்திருப்பதால், அதேபோல் நடித்தால் ரசிக்கமாட்டார்கள் என்பதால், இந்த கதையில் ஏதாவது ஒரு புதுமையை செய்ய வேண்டும் என எண்ணினோம். 
 
எனக்குள் ஒருவனில் எப்படி கமிட்டானீர்கள்?
 
ஸ்கிரிப்டை படித்ததுமே எனக்கு இப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே இரண்டுவிதமான ரோல் இருக்கும்.
 
கருப்பாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களே?
 
ஆமாம், ஒரு கதாபாத்திரம் நான் ரொம்பவும் கருப்பா இருக்கிற மாதிரி இருக்கும். அந்த கெட்டப்புல நான் நடித்தபோதுஇ படக்குழுவினருக்குகூட நான் யாரென்றே தெரியாத அளவுக்கு இருந்தது. இது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. 
 
ஒரிஜினலில் அப்படி கருப்பாக எல்லாம் காட்டியிருக்க மாட்டார்கள். நீங்கள் இப்படி நடித்திருப்பது ஏற்றுக்கொள்ளப்படுமா?
 
இதுவரைக்கும் நான் அழகா இருக்கிறேன்னுதான் என்னை நிறைய பேர் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள். இந்த படத்துக்கு பிறகு அழகையும் மீறி எனது நடிப்பிற்காகவும் நிறைய படங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். 
 
உலகக் கோப்பை கிரிக்கெட் - பரீட்சைக்கும் மத்தியில் படத்தை வெளியிடுகிறீர்களே...?
 
தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல் இப்படம் வெளிவரும் நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட் - பரீட்சைக்கும் மத்தியில் இப்படத்தை வெளியிடுகிறோம். முழுக்க எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த பலபரீட்சையில் இறங்குகிறோம். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.
 
இந்த ரிஸ்க் தேவையா?
 
இந்த சீசனில் நிறைய பேர் படங்களை வெளியிட பயப்படுவார்கள். இந்த படம் வெளிவந்த பிறகு எங்களை குறிக்கோள் காட்டி நிறைய பேர் இந்த சீசனில் படங்களை வெளியிடுவார்கள்.