1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 8 ஜூன் 2015 (12:08 IST)

என்னுடைய திறமைகளை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை - மாதவன் பேட்டி

கடந்த மூன்று வருடங்களாக திரையுலகியிலிருந்து விலகியிருந்த மாதவன் நடிப்பில் மூன்று வருட இடைவெளிக்குப் பின் வெளியான படம், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ். ஆனந்த் எல்.ராய் இயக்கிய இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் செய்தி சானலுக்கு மாதவன் பேட்டியளித்தார்.
தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் வரவேற்பு எப்படியிருக்கிறது?
 
நடிப்பில் இருந்து மூன்றாண்டுகள் ஓய்வு எடுத்து கொண்டு, அந்த இடைவெளிக்குப் பின்னர் தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெளியானதும் ரசிகர்களின் அளவுகடந்த அன்பு என் மீது பொழியத் தொடங்கியுள்ளது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
 
இந்த இடைவெளி தேவைதானா?
 
மூன்று மாதங்களுக்கு ஒரு படம் தர எனக்கும் ஆசைதான். ஆனால், இறுதியில் நாம் என்ன வேலை செய்தோம் என்று எண்ணிப் பார்க்கும்போது, நாம் செய்த வேலையில் நமக்கு ஒரு மனநிறைவு ஏற்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை பணத்துக்காக மட்டும் ஒரு படத்தில் நடிப்பதில் உடன்பாடில்லை.
 
மூன்று கான் நடிகர்கள்தான் இந்தியில் அனைவருக்குமான போட்டி. உங்களை யாருடைய போட்டியாளராக நினைக்கிறீர்கள்?
 
கான்களுடனோ வேறு எந்த நடிகர்களுடனோ நான் போட்டியிடவில்லை. எனது வேலையை சிறப்பாக செய்வதையே விரும்புகிறேன். எனவே, இந்த தொழிலில் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதாக கூறப்படுவது எல்லாம் ஊடகங்களின் விளையாட்டு, அவ்வளவுதான்.

நல்ல படங்கள் அதிகமாக வருவதில்லையே, ஏன்?
 
ஒரு நல்ல படத்தை உருவாக்குவது கடினமான காரியம். படத்தின் பர்ஸ்ட் லுக், படத்தை நல்லபடியாக வியாபாரம் செய்து, குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்வது என பல பிரச்சனைகள் உள்ளன. 
விருது குறித்த உங்க அபிப்ராயம் என்ன?
 
விருது கிடைத்துவிட்டால் எனக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் விருது பெறுவது என்பது புதிதும் கிடையாது, பெரிய விஷயமும் கிடையாது. விருது பெறுவதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அது செய்தியாகிறது என்பது மட்டுமே. 
 
இந்தியில் யார் நம்பர் ஒன் நடிகர் என்று நினைக்கிறீர்கள்?
 
விருதைப் போலவே நம்பர் விளையாட்டிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. எவ்வளவு காலம் இந்தத் துறையில் நீடித்து நிலைத்திருக்கிறோம் என்பதும், உங்களுக்கு எத்தனை பேர் நடிக்கும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்பதும்தான் முக்கியம். 
 
அவ்வகையில், இன்றும் கூட படங்களில் நடித்து கொண்டிருக்கும், அந்தப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரு.அமிதாப் பச்சன் மிகவும் வெற்றிகரமான நபர் என்றே நான் கருதுகிறேன்.
 
இந்திப்படவுலகு உங்களை சரியாக பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா?
 
என்னால் என்ன முடியும் என்பதை இந்திப்பட தயாரிப்பாளர்களிடம் இன்னும் முழுமையாக நான் வெளிப்படுத்தவில்லை.