கேப்டனும், துணைக் கேப்டனும் சொதப்பியதால் தோற்றதா இந்திய அணி?
நேற்றைய போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தொடரில், இந்திய அணி தொடர்ந்து வெற்றியை நெருங்கியும் தோல்வியை தொடர்ந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 300 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படிருந்தது. ஆனால், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அதேபோல தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களும் மோசமான ஷாட்களை ஆடி வெளியேறினர். டி காக்கின் ரன் அவுட்டும், டு பிளஸ்ஸியின் அவுட்டும் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதனால், அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
பின்னர் களமிறங்கிய, இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்து வெளியேறியபோது இந்திய அணி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்திருந்தது. 23.1 ஓவர்கள் முடிவடைந்திருந்தது.
கேப்டன் தோனி களமிறங்கினார். விராட் கோலி 36 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தார். அப்போது இந்திய அணிக்கு 158 ரன்கள் தேவையாக இருந்தது.
3ஆவது விக்கெட்டாக தோனி 61 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறுகையில், இந்திய அணி 41.5 ஓவர்களில் 193 ரன்கள் குவித்திருந்தது.
இடைப்பட்ட 18.4 ஓவர்களில் கேப்டனும், துணைக்கேப்டனும் இணைந்து 80 ரன்கள் எடுத்திருந்தனர். அதாவது 112 பந்துகளில் 80 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ரெய்னா, விராட் கோலி, ரஹானே என அடுத்தடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து சொதப்பி வரும் ரெய்னாவை எதற்காக தோனி அணியில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
சற்று சுமாராக ஆடிய பொழுதும், யுவராஜ், கவுதம் கம்பீர் உள்ளிட்ட வீரர்களை நீக்கிய தோனி, சென்னை அணியில் விளையாடிய காரணத்தால் மட்டுமே அணியில் தொடர்ந்து நீடிக்க செய்கிறாரா? என்ற சந்தேகம் அளிக்கிறது.
இதில் விராட் கோலி அரைச்சதத்தை கடக்க 64 பந்துகளை எடுத்துக் கொண்டார். தோனி 47 ரன்கள் எடுக்க 61 பந்துகள் எடுத்துக் கொண்டார். தோனியும், கோலியும் ஆடிய 30-இல் இருந்து 39 ஓவர்கள் வரை 35 பந்துகள் ’ரன்’ ஏதும் எடுக்கப்படவில்லை [Dots] என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில், கேப்டன் தோனியும், துணைக்கேப்டன் விராட் கோலியும் மெதுவாக விளையாடி வெறுப்பேற்றினர். இதுவும் ஒருவகையில் தோல்விக்கு காரணமாக அமைந்தது.