கிரிக்கெட்டில் தோல்வி: ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர்
பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தாங்கமுடியாத காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்ட ஆஸ்ட்ரேலிய தடகள வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் இருந்த மின்சார அமைப்புகள், மரச்சாமான்கள் ஆகியவற்றை அடித்து உடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதாவது செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அவர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.செய்தித்தாள் ஒன்றின் அறிக்கையின் படி இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக கோஷமிட்டதாகவும், ஆஸ்ட்ரேலியா தோல்வியடைந்ததைத் தாங்கமுடியாமல் வாஷிங் மெஷின் ஒன்றை 8-வது மாடியிலிருந்து தூக்கிப் போட்டு உடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து செவ்வாயன்று ஆஸ்ட்ரேலிய காமன்வெல்த் விளையாட்டு வீரர்களில் சிலர் இந்த மோசமான ரவுடித்தனத்தில் ஈடுபடதாக டெல்லி காவல்துறையில் உள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.டெண்டுல்கரின் ஆட்டம் ஆஸ்ட்ரேலியாவை தோற்கடித்ததால் அவர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்த்றைக்கு புகார் வந்தும் அவர்கள் அரசுகளுக்கு இடையிலான உறவு காரணமாக இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டதாகவும் தெரிகிறது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளும் இதனைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.இங்குதான் இந்திய அதிகாரிகள் சற்று யோசிக்கவேண்டும். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்ட்ரேலியா சென்ற போது ஹர்பஜன் சிங் மீது தேவையில்லாத நிறவெறிப்புகார் கொடுத்து, அதில் ஒட்டு மொத்த இந்திய அணியையே அவமானம் செய்த ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள், ஆஸ்ட்ரேலிய வீரர்கள் கடைசியில் ஹர்பஜன் தண்டிக்கப்படவில்லை என்பதற்காக இன்று வரை பெரிய தவளைக்கூச்சல் எழுப்பி வருகின்றனர்.
அப்போது அவர்கள் இந்திய-ஆஸ்ட்ரேலிய உறவுகள் குறித்து கவலைப்படவில்லை. இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறோமே என்று அவர்கள் ஒருநாளும் நினைக்கவில்லை.ஆனால் இன்று டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்க வந்த 'உலகின் தலை சிறந்த விளையாட்டுத் திறனும், உணர்வும் உடைய' ஆஸ்ட்ரேலிய வீரர்கள் இந்தியா நியாயமாகப் பெற்ற வெற்றியில் வயிற்றேரிச்சல் அடைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ரவுடித்தனம் செய்துள்ளனர்.இதனை இருதரப்பு உறவுகளுடன் குழப்பிக் கொண்டு ஆஸ்ட்ரேல்ய அரசாங்கத்திற்கு தர்ம சங்கடம் சேர்க்கவேண்டாம் என்று ஆஸ்ட்ரேலிய வீரர்களின் அராஜகத்தினை மறைக்க விரும்புகின்றனர் அதிகாரிகளும், காவல்துறையினரும்.பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததாக அந்த ஆஸ்ட்ரேலிய வீரர்கள் கைது செய்யப்படுவதே முறை. குறைந்தது அந்த தடகளவீரர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களது பதக்கத்தையாவது பறிக்கவேண்டும்.விளையாட்டு உணர்வு, எல்லைகள் கடக்காமை என்று வாய்கிழிய பேசி வரும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், சமீபத்தில் கூட ஹர்பஜனுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திய ஆண்ட்ரூ சைமன்ட்சும் ஆஸ்ட்ரேலிய வீரர்களின் இந்தச் செயலுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியா இந்தியாவை 8-0 என்று ஊதித்தள்ளியது, இதற்காக ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பொருட்களை போட்டு உடைத்தால் அது எவ்வாறு முட்டாள் தனமான, கண்டிக்கத்தக்க செயலோ அதுபோல்தான் இதுவும் ஒரு முட்டாள் தனமான, விளையாட்டு உணர்வுக்கு மதிப்பளிக்காத அராஜகமான செயல் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.உலகின் தலை சிறந்த விளையாட்டுத் திறன்கள் கொண்ட நாட்டைப் பிரதிசித்துவம் செய்யும் இந்த ஆஸ்ட்ரேலிய வீரர்களின் செயல் ஆஸ்ட்ரேலியாவுக்கு மட்டுமல்லாது, விளையாட்டு உலகிற்கே ஏற்படுத்திய மிகப்பெரிய களங்கமாகும்.இந்த அராஜகச் செயலில் ஈடுபட்ட வீரர்களை ஆஸ்ட்ரேலிய் ஊடகமும், ஆஸ்ட்ரேலிய காமன்வெல்த் கூட்டமைப்பும் கடுமையாக கண்டிக்கவேண்டும் அதுதான் அவர்களின் நேர்மையைக் காண்பிப்பதாய் அமையும்.செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.