வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (09:30 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – ஆக்ஸ்ட்டில் தொடங்கி ஏப்ரலில் முடிவு !

டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை  ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 போட்டிகளின் தாக்கத்தால் 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவுக் குறைந்துகொண்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளைக் காண இப்போதெல்லாம் ரசிகர்கள் மைதானத்துக்கு வெகு அரிதாகவே வருகின்றனர். எனவே டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்க ஐசிசி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த முடிவெடுத்துள்ளது.

10 வருடகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஆஷஸ் தொடரில் இருந்து தொடங்கும் இந்த தொடர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் முடிய இருக்கிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் டெஸ்ட் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், வங்க தேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வோர் அணியும் மீதமுள்ள எட்டு அணிகளில் ஆறு அணிகளுடன் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று தொடர்கள் சொந்த நாட்டிலும், மூன்று தொடர்கள் வெளிநாடுகளிலும் நடைபெறும். ஒரு தொடர் இரண்டிலிருந்து, ஐந்து போட்டிகள் வரை இருக்கலாம். ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்களின் முடிவில் அதிகப் புள்ளிகளோடு முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதி வெற்றிபெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.