வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (15:25 IST)

மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சாய்னா நேவால்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்பிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்ற கைகோடு ஒற்றையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்து புதிய சரித்திரம் படைத்தார்.
 

 
பேட்மிண்டனில் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை இவர் தான். ஆனால் மறுவாரமே மலேசிய ஓபன் போட்டியில் அரைஇறுதியில் வீழ்ந்ததால், 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான லீ சூய்ருய் முதலிட அரியணையில் மறுபடியும் ஏறினார்.
 
இந்த நிலையில் நேற்று புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சாய்னா நேவால் 80,191 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அதாவது சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியை சூய்ருய் (72,964 புள்ளி) புறக்கணித்ததால் இரண்டு இடங்களை பறிகொடுத்து 3வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இதனால் தானாகவே சாய்னா முதலிடத்தை எட்டி விட்டார்.
 
உலக சாம்பியனும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலினா மரின் 79,578 புள்ளிகளுடன் 2வது இடத்தை பெற்றுள்ளார். ‘டாப்–10’ வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 9வது இடத்தில் இருந்து 12வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
 
ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 4வது இடத்தில் நீடிக்கிறார். காஷ்யப் 14வது இடத்திலும், பிரனாய் 15வது இடத்திலும் இருக்கிறார்கள்.