1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (13:59 IST)

இறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் கும்ப்ளே இரங்கல்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அங்கிட் கேஷ்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் கிழக்கு வங்காளம் - பவானிபோர் கிளப் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டியின் போது அங்கிட் கேஷ்ரி (20) பீல்டிங் செய்கையில் பந்தை கேட்ச் செய்ய முயன்ற போது, சக வீரரான சவுரவ் மொண்டலுடன் எதிர்பாராதவிதமாக மோதினார்.

 
இதில் அங்கிட் கேஷ்ரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அங்கிட் கேஷ்ரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
இதனால் அங்கிட் கேஷ்ரி திங்கட்கிழமை காலை பரிதாபமாக இறந்தார். இளம் கிரிக்கெட் வீரர் அங்கிட் கேஷ்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அங்கிட் கேஷ்ரியின் மரணத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்கால வாழ்க்கை அசாதாரண சம்பவத்தால் சீர்குலைந்துவிட்டது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அங்கிட்டின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு கடவுள் பலம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 
அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர் அங்கிட் ஃபீல்டிங்கின்போது தனது வாழ்க்கையை இழந்தது சோகமான செய்தியாகும். அவரது சுற்றத்தார்களுக்கு அவருடைய இழப்பைத் தாங்கக்கூடிய வல்லமையை கடவுள் அருளட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.