1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (13:42 IST)

ஆஸிக்கு எதிராக இந்திய அணித்தேர்வு - கோஹ்லி உள்ளே… ரோஹித் வெளியே !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விளையாடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான இந்திய அணித் தேர்வு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சமீப காலமாக இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக இருப்பதால் அணித் தேர்வில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடருக்குப் பின் இந்திய அணிக்கு வேறு எந்த சர்வதேசப் போட்டிகளிலும் இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு நேரடியாக உலகக்கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது.

எனவே ஆஸி அணிக்கு எதிரான தொடரில் தேர்வாகும் வீரர்களே உலகக் கோப்பைப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் தேர்வு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் ’ஆஸித் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கோஹ்லி மீண்டும் அணிக்குத் திரும்புவார். மாற்று  விக்கெட் கீப்பருக்கான தேர்வில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இடையே போட்டி நிலவுகிறது.  மேலும் பந்த்வீச்சைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் முழு உடற்தகுதியுடன் ஆயத்தமாக உள்ளனர். இவர்களுடன் கலீல் அகமதும் சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டு பந்து வீச்சு கூட்டணி பரிசோதிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.