1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (13:43 IST)

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்துவதா? - மோடிக்கு பிடி.உஷா கடிதம்

பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தும் விளையாட்டு ஆணையத்தின் முடிவிற்கு முன்னாள் ஓட்டபந்தய வீராங்கனை பி.டி.உஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.டி.உஷா கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளை இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தி வருகிறது.
 
இந்த ஆண்டு டிசம்பர் 4-வது வாரத்தில் புனேவிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நாசிக்கிலும் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்த இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதற்கு எத்தகைய காரணங்கள் பின்புலத்தில் இருந்தாலும், இது ஜனநாயகமற்றது ஆகும். என்னுடைய உச்சபட்ச கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அந்தக் காலம். ஆண், பெண் சமநிலையை மேம்படுத்த உலகம் முழுக்க பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் தனது செயலை நியாயப்படுத்த முடியாது.
 
இது சர்வதேச ஒலிம்பிக் சாசனத்திற்கும் எதிரானது என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.