1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (16:57 IST)

இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்து அபார ஆட்டம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்துள்ளது.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய மொய்ன் அலி சதம் விளாசியதுடன், 120 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களான கேட்டோன் ஜென்னிங்ஸ் 1 ரன்னிலும், கேப்டன் குக் 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால், 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.

ஆனால், ஜோ ரூட் மற்றும் மொய்ன் அலி கூட்டணி அணியை தூக்கி நிறுத்தியது. அணியின் ஸ்கோர் 167ஐ தொட்டபோது ரூட் 88 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பைர்ஸ்டோ 1 ரன்னில் அரைச்சதத்தை தவறவிட்டார். அவர் 49 ரன்களில் வெளியேறி இருந்தார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறுதி நேரத்திலேயே பென் ஸ்டோக்ஸ் மேற்கொண்டு ஒரு ரன் சேர்த்து 6 ரன்களில் வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 300 தொட்டபோது ஜோஸ் பட்லர் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர், மொயீன் அலியும் 146 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆக 321 ரன்களுக்கு 7 விக்கெட் என்றானது.

இதனால், இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டாது என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், லியம் டாவ்சன் - அடில் ரஷித் இணை இந்த கனவை தகர்த்தெருந்தது. அபாரமாக ஆடிய 108 ரன்கள் குவித்தது. பின்னர் ரஷித் 60 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லியம் டாவ்சன் 66 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.