பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இடம் இதுதான்...


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 19 செப்டம்பர் 2016 (22:40 IST)
ரியோ நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியிலும் சீனா முதலிடத்தையும், இந்தியா 42ஆவது இடத்தையும் பிடித்தன.
 
 
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இம்மாதம் 7ம் தேதி கோலாகலமாக துவங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் [செப்.18] நிறைவடைந்தது. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டின் தேசியக்கொடியை ஏந்தி அணி வகுத்தனர். இந்தியா சார்பில் தமிழகத்தின் தங்க மகன் மாரியப்பன் நமது மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றார்.
 
பாராஒலிம்பிக் போட்டிகளில் சீனா வீரர்கள் பதக்கக் குவிப்பில் முதலிடத்தைப் பிடித்தனர். போட்டியின் நிறைவில் 105 தங்கம், 81 வெள்ளி, 51 வெண்கலம் என 237 பதக்கங்களை குவித்து முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டனர்.
 
கடந்த 2014ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 89 தங்கம் வென்று முதலிடம் பிடித்த சீனா, இந்த முறை கூடுதலாக 10 தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றது.
 
இந்தியா:
 
கடந்த முறை மூன்றாவது இடம் பிடித்த இங்கிலாந்து 64 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் வென்று 2வது இடம்பிடித்தது. 41 தங்கம், 37 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கத்தை வென்ற உக்ரைன் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம்பிடித்தது.
 
40 தங்கத்துடன் 112 பதக்கங்களை வென்ற அமெரிக்காவுக்கு 4வது இடம் கிடைத்தது. போட்டியை நடத்திய பிரேசில் 14 தங்கம், 29 வெள்ளி, 26 வெண்கலம் என 63 பதக்கங்களை வென்று 8வது இடத்தைப் பிடித்தது. 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு 42வது இடம் கிடைத்தது.


இதில் மேலும் படிக்கவும் :