வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (19:22 IST)

ஒரு முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர்தான்! – ஐசிசியின் ஐடியாவுக்கு சச்சின் வாழ்த்து

இனி இரண்டு அணிகள் விளையாடும்போது ஏதாவது ஒரு அணி வெற்றிபெறும் வரை சூப்பர் ஓவரை தொடர்வதாக ஐசிசி எடுத்துள்ள முடிவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஐசிசி உலக நாடுகள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அங்கே தற்போது நடைமுறையில் உள்ள சூப்பர் ஓவர் முறைகளில் சில மாற்றங்களை ஐசிசி அறிவித்தது. கிரிக்கெட் விளையாடும் அணிகள் கொடுக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் சமமாக ரன்கள் எடுத்திருந்தால் சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

சூப்பர் ஓவர் முறையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அதில் யார் அதிக ரன்கள் பெறுகிறார்கள் என்பதை வைத்து வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூஸிலாந்து ஆட்டத்தில் மொத்த ஓவர்கள் மற்றும் சூப்பர் ஓவர் ஆகிய அனைத்திலும் இரண்டு அணிகளும் சரிசமமாக இருந்ததால் யார் வெற்றி பெற்றார் என்பதை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அப்போது எந்த அணி அதிக பௌண்டரிகள் அடித்தார்கள் என்பதை கணக்கிட்டு இங்கிலாந்திற்கு உலக கோப்பை அளிக்கப்பட்டது. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் நிபுணர்கள் பலர் இது தவறான நடைமுறை என விமர்சித்தார்கள். இந்நிலையில் தற்போது இரு அணியில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெறும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவரை நடைமுறைப்படுத்தலாம் என ஐசிசி விதிமுறைகளை மாற்றியுள்ளது.

இந்த புதிய நடைமுறையை வரவேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இதன்மூலம் சரியான வெற்றியாளருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என கூறியுள்ளார்.