மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவர்
சென்னையை சேர்ந்த 12 வயது குகேஷ் என்ற சிறுவர், உலகின் 2வது இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்தா குகேஷ், தினேஷ் சர்மாவை 9வது சுற்றில் வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இதன் மூலம் உலகிலேயே மிக இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் என்பவர் உலகின் முதலாவது இளவயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ் கூறியதாவது: முதல் சுற்று முடிந்ததும் பதற்றமடைந்தாலும், போட்டியாளர் செய்த தவறான நகர்வை சாதகமாக்கி வெற்றி பெற்றேன். எனக்கு உறுதுனையாக இருந்த பள்ளி, பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இதேபோல் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்து உலக சாம்பியனாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அனைத்து சதுரங்க போட்டிகளிலும் அழுத்தம் அதிகமாக இருந்தது, ஆனால் என் விளையாட்டை பாதிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.
மிக இளவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவர் குகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.