வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 மே 2015 (10:35 IST)

ஊழல் குற்றச்சாட்டில் பல ஃபிஃபா அதிகாரிகள் கைது

கால்பந்து விளையாட்டை வெளிப்படையாகவும் அனைவரும் விளையாடி களிக்கும்படியும் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஊழல் புரிந்து தம்மை வளப்படுத்திக் கொண்டனர் என அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் லெரெட்டா லின்ச் தெரிவித்துள்ளார்.


உலகளவில் கால்பந்து விளையாட்டை நெறிப்படுத்தி நடத்தும் சரவதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டை முன்னெடுப்பது குறித்து அவர் விளக்கினார்.
 
இந்த 14 பேரின் 9 பேர் முன்னாள் மற்றும் இந்நாள் ஃபிஃபா உயரதிகாரிகளாவர். அவர்களது பெயர்களும் குற்றச்சாட்டுக்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 
அவர்கள் மீது மோசடி, கள்ளச்சந்தை வர்த்தகம் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகியக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
கடந்த 20 ஆண்டுகளில் இந்த அதிகாரிகள் 150 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமானத் தொகையை ஊழல் மற்றும் கையூட்டு மூலம் பெற்றுள்ளனர் என்றும் அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.
 
பல ஊழல்கள் அமெரிக்காவிலோ அல்லது அமெரிக்கா வழியாகவோ நடைபெற்றதால் சுவிஸ்ஸில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வழக்கை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா கோரியுள்ளது.
 
இது தவிர எதிர்வரும் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் உரிமை ரஷ்யாவுக்கும், கத்தாருக்கும் அளிக்கப்பட்டது குறித்து தனியாக ஒரு குற்ற விசாரணையை ஸ்விஸ் அரச வழக்கறிஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல்

 
ஃபிஃபா அமைப்பின் தலைவர் பதவிக்கானத் தேர்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கைதுகள் நடைபெற்றிருந்தாலும், அவை தேர்தலை எவ்வகையிலும் பாதிக்காது என ஃபிஃபா கூறியுள்ளது.
 
நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் செப் பிளாட்டர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
 
சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ள சூழலில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
 
ஃபிஃபா அமைப்பின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாததே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் என பிரஞ்சு கால்பந்து லீகின் தலைவர் ஃப்ரெட்ரிக் தியஹே கருத்து வெளியிட்டுள்ளார்.


 
கால்பந்து உலகுக்கே இது ஒரு துக்க தினம் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு செப் பிளாட்டரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் கூறினாலும், தேர்தல் என்னவோ வெள்ளிக்கிழமை நடைபெறும் என்பதில் இதுவரை மாற்றமில்லை.
 
கைதுகள், விசாரணைகள் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஃபிஃபாவின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பதும், கால்பந்து ரசிகர்கள் ஆழ்ந்த கவலையும் சீற்றமும் கொண்டுள்ளனர் என்பவை தெளிவாகவே தெரிகின்றன.