கிரிக்கெட் மைதானத்தில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – ஜோ ரூட்டுக்கு ரசிகர்கள் பாராட்டு!
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் ஓரினச்சேர்க்கைக் குறித்து இழிவானக் கருத்துகளைக் கூறியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் ஷனன் பேட் செய்து கொண்டிருந்த ஜோ ரூட்டை நோக்கி கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார். அப்போது ஓரினச்சேர்க்கைக் குறித்த இழிவான சில வசைகளையும் கூறியுள்ளார். அதற்கு நிதானமாக பதிலளித்த இங்கிலாந்து கேப்டன் ரூட் ‘ஓரினச்சேர்க்கை ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை. அதனைக் கேலி செய்யாதீர்கள்’ எனக் கூறினார்.
இதில் ஜோ ரூட் சொன்ன விஷயம் ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாகக் கேட்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் என்னக் கூறினார் என்பது மைக்கில் கேட்கவில்லை. இது தொடர்பாக போட்டி நடுவர்கள் கேப்ரியலிடம் விசாரணை மேற்கொண்டு அவரை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஜோ ரூட்டின் பக்குவமான இந்தப் பதிலைக் கேட்ட ரசிகர்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.